என் மலர்
தமிழ்நாடு
உல்லாசமாக இருந்து விட்டு அடித்து துன்புறுத்தியதால் கோவில் பூசாரியை கொன்றோம்: கைதான கள்ளக்காதலி வாக்குமூலம்
- மாரிமுத்து, கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
- கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் போலீசார் மாரிமுத்துவின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 44). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மாரிமுத்து கோத்தகிரி கடை வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்றுமுன்தினம் மாலை மாரிமுத்து வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றார். கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பூஜை நடத்துவதற்காக செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார்சைக்கிளில் சென்றார். அதன்பிறகு நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மாரிமுத்துவின் மனைவியும், குடும்பத்தினரும் அவரை தேடத் தொடங்கினர்.
இந்தநிலையில் மாரிமுத்து, கோத்தகிரி கோவில்மேடு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் போலீசார் மாரிமுத்துவின் பிணத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாரிமுத்துவுக்கும், கோவில்மேடு பகுதியில் வசித்த தனலட்சுமி (25) என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருந்ததும் தெரியவந்தது. தனலட்சுமியை தேடியபோது அவர் தலைமறைவாகி இருந்தார். தனிப்படை போலீசார் விசாரித்தபோது தனலட்சுமி, உதயகுமார் (37) என்பவருடன் மேட்டுப்பாளையத்தில் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரித்தபோது அவர்கள் 2 பேரும் சேர்ந்து தான் மாரிமுத்துவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
கைதான தனலட்சுமி போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும் வேலைக்கு சென்று வந்தேன். நான் கடந்த 2013-ம் ஆண்டு சோலூர்மட்டத்தைச் சேர்ந்த முரளிதரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தகிரி எம்.கைகாட்டி, பாண்டியன் நகரைச் சேர்ந்த உதயகுமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நெருங்கி பழகியதில் நான் கர்ப்பம் ஆனேன். இதனால் அதிர்ச்சி அடைந்த எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர் உதயகுமார் என்னை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் எனக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். அவர்களை பிரியாமல் அவர் என்னுடன் தொடர்பில் இருந்தார். உதயகுமார் வீட்டுக்கு வரும் சமயத்தில் எனது குழந்தைகளை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விடுவேன். பின்னர் நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்.
இந்தநிலையில் கோத்தகிரி கோவிலில் பூசாரியாக பணியாற்றும் மாரிமுத்துவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. உதயகுமாருக்கு தெரியாமல் அவருடன் ஜாலியாக இருந்தேன்.
கடந்த 23-ந்தேதி உதயகுமார் என் வீட்டுக்கு வருவதாக கூறி இருந்தார். இதனால் குழந்தைகளை பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு உதயகுமாருக்காக தயாராக இருந்தேன். இரவு 8.30 மணி அளவில் நான் எதிர்பாராத வகையில் மாரிமுத்து எனக்கு போன் செய்து உன்னை சந்திக்க வருவதாக தெரிவித்தார். உதயகுமார் வருவதாக கூறி இருப்பதால் நீ வராதே என அவரிடம் கூறினேன். ஆனால் எனது பேச்சை பொருட்படுத்தாமல் மாரிமுத்து என் வீட்டுக்கு வந்து விட்டார்.
உதயகுமார் வந்தால் பிரச்சனை ஆகி விடும் என்பதால் உடனே இங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கூறினேன். குடிபோதையில் இருந்த மாரிமுத்து நான் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் என்னுடன் உல்லாசமாக இருக்க என்னை கட்டாயப்படுத்தினார். எப்படியும் அவரை வெளியே அனுப்பி விட வேண்டும் என்பதால் மாரிமுத்துவின் ஆசைக்கு இணங்கி உல்லாசமாக இருந்தேன். அதன்பிறகும் மாரிமுத்து அங்கிருந்து போக மறுத்து என்னுடன் தகராறு செய்தார். அவர் என் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார். சோபாவின் மீது விழுந்ததில் எனக்கு தலையிலும், முகத்திலும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அதற்குள் இரவு 9.30 மணி ஆகி விட்டது. உதயகுமார் சொன்னபடி வீட்டுக்கு வந்து விட்டார்.
எனக்கு தலையில் ரத்தம் வருவதை பார்த்து ஆத்திரம் அடைந்த அவர், மாரிமுத்துவை தாக்கினார். நானும் அவருடன் சேர்ந்து தாக்கினேன். இதில் மாரிமுத்துவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவர் அணிந்திருந்த வெள்ளி செயின், காப்பு மற்றும் செல்போனை திருடினோம். பின்னர் வீட்டு அருகே மாரிமுத்துவின் பிணத்தை வீசினோம்.
இரவு நேரம் ஆகி விட்டதால் நானும், உதயகுமாரும் வீட்டிலேயே தங்கியிருந்தோம். காலையில் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றோம். போலீசில் பிடிபட மாட்டோம் என கருதி இருந்தோம். ஆனால் போலீசார் விசாரித்து எங்களை பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
மாரிமுத்துவை கொலை செய்தபோது தனலட்சுமி நைட்டி அணிந்திருந்துள்ளார். மாரிமுத்துவை கொலை செய்ததால் நைட்டியில் ரத்தக்கறை பட்டுள்ளது. அந்த நைட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தனலட்சுமியையும், உதயகுமாரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.