என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ காட்சி.
"பல் இல்லாத உனக்கு எதற்கு மனைவி என கேட்டதால்" நண்பனின் 5 பல்லை அடித்து உடைத்த தொழிலாளி
- சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் குமார்நகரை அடுத்த வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 36). தையல் தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (45). நண்பர்களான இருவரும் மதியம் முதல் திருப்பூர் காந்திநகர் அருகே மது அருந்தி உள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் இரவு இருவரும் டாஸ்மாக் பாரை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது பாண்டியன் காளிமுத்துவை பார்த்து "பல் இல்லாத உனக்கு எதற்கு பொண்டாட்டி" என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த காளிமுத்து அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து உனக்கு பல் இருப்பதால் தானே இப்படி பேசுகிறாய் உன் பல் அனைத்தையும் உடைத்து விடுகிறேன் என்று கூறிக்கொண்டு பாண்டியன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார். பாண்டியன் கீழே தரையில் படுத்திருந்த நிலையில் காளிமுத்து உருட்டு கட்டையால் தொடர்ந்து பாண்டியன் முகத்தில் ஓங்கி அடித்தார்.
இதில் பலத்த காயமடைந்த பாண்டியனின் 5 பற்கள் உடைந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காளிமுத்துவை தடுத்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காளிமுத்துவை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






