search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன்- தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் உறுதிமொழி
    X

    அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன்- தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் உறுதிமொழி

    • மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
    • கட்சியின் விரிவாக்கம், கட்சியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

    சென்னை:

    நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் எப்போது என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நிலையில் கடந்த 2-ந்தேதி 'தமிழக வெற்றிக்கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்திலும் அவரது கட்சியை பதிவு செய்தார்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் விஜய் கட்சி தொடங்கியதால் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பாரா? கூட்டணி அமைப்பாரா? தனித்து போட்டியிடுவாரா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தன.

    அதற்கும் தனது அறிக்கையின் மூலம் விடை சொன்னார். அதாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் தனது இலக்கு 2026 சட்டமன்ற தேர்தல்தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

    இந்த நிலையில் கட்சிக்கான கொடி, சின்னத்தை தயார் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். சின்னத்தை பொறுத்தவரை பெண்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அதற்கு ஏற்ற வகையில் சின்னத்தை தேர்வு செய்யும்படி நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஏற்கனவே நான்கைந்து சின்னங்கள் பரிசீலனையில் உள்ளது. மேலும் புதிய சின்னங்களையும் தேட தொடங்கி இருக்கிறார்கள்.

    அடுத்தக்கட்ட நடவடிக்கையாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். இதற்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. தலைமையின் அழைப்பை ஏற்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் நேற்று மாலையிலேயே சென்னைக்கு வந்துவிட்டார்கள்.

    இன்று காலை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். உறுதிமொழி வருமாறு:-

    நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

    மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக் காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப்பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன்.

    சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சமஉரிமை, கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்.

    கூட்டத்தில் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது, கட்சியின் கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது, மாவட்ட தலைவர்களை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்கள்.

    விஜய் மக்கள் இயக்கத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட தலைவர்களாகவும் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    கட்சியின் விரிவாக்கம், கட்சியை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.

    Next Story
    ×