search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    யாருடன் கூட்டணி?- மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை
    X

    யாருடன் கூட்டணி?- மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை

    • எந்த கூட்டணியில் சேருவது என்கிற குழப்பமான நிலையில் தே.மு.தி.க. உள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாகி வருகின்றன. அந்த வகையில் தே.மு.தி.க.வும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு அந்த கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிறகு கட்சியை வழிநடத்தி வரும் பிரேமலதா பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    தே.மு.தி.க.வை பொறுத்த வரையில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது மிகப் பெரிய வெற்றியை அந்த கட்சி பெற்றிருந்தது.


    அதன்பிறகு நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தலிலும் தே.மு.தி.க. தோல்வியையே தழுவியது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் இதுவரை வெற்றி பெறவே இல்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதனை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதே பிரேமலதாவின் எண்ணமாக உள்ளது.

    இதனால் வெற்றி பெறும் கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதே அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் நிர்வாகிகளின் நோக்கமாக உள்ளது. தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி தீவிர பேச்சு வார்த்தையை நடத்தி 4 தொகுதிகளை தருவதற்கு சம்மதித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அ.தி.மு.க.வும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

    இதனால் எந்த கூட்டணியில் சேருவது என்கிற குழப்பமான நிலையில் தே.மு.தி.க. உள்ளது. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் கருத்துகளை கேட்பதற்கு முடிவு செய்த பிரேமலதா இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டி இருந்தார்.

    இந்த கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதில் பங்கேற்க வந்த பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.


    அதன்பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவர் தலைமையில் நடைப்பெற்றது. மாநில நிர்வாகிகள் அவை தலைவர் டாக்டர் இளங்கோவன் துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் வி.சி.ஆனந்தன், அனகை முருகேசன், பால சுப்பிரமணியன், சூரியா, பாலா, வேல்முருகன், பழனி, ஆவடி மாநகர, மாவட்ட செயலாளர் சங்கர் உள்பட 82 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது பற்றி நிர்வாகிகளும், மாவட்ட செயலாளர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து பேசினார்கள்.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியை விரும்புவதாக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர். விஜயகாந்த் மரணம் அடைந்துள்ள நிலையில் தனித்து போட்டியிடலாம் என்றும் சிலர் பேசியுள்ளனர். கட்சியினரின் கருத்துக்களை கேட்டுக் கொண்டு தீவிரமாக ஆலோசனை நடத்தி கட்சி நலன் கருதி முடிவெடுப்போம் என்று பிரேமலதா அவர்களிடம் தெரிவித்தார்.


    பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்று அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

    பா.ஜனதா கூட்டணியில் கள்ளக்குறிச்சி, சேலம் உள்பட 4 பாராளுமன்ற தொகுதிகளை தருவதாகவும் மேல்சபை எம்.பி. பதவி ஒன்று தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அ.தி.மு.க.வும் தே.மு.தி.கவை எப்படியாவது தங்கள் பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சிலர் தே.மு.தி.க. தலைமையிடம் தொடர்ந்து ரகசியமாக பேசி வருகிறார்கள்.

    பா.ஜனதா கூட்டணியில் நீங்கள் கேட்கும் தொகுதிகளைவிட கூடுதல் தொகுதிகள் தருவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் மேல் சபை எம்.பி. பதவியை தருவது பற்றியும் பேசிக் கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இப்படி தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க., பா.ஜ.க. இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில் இன்று நடை பெறும் கூட்டத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்படுவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×