search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை மாலை சென்னை வருகிறார் மோடி : ரோடு-ஷோவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு
    X

    நாளை மாலை சென்னை வருகிறார் மோடி : ரோடு-ஷோவுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

    • பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராயநகா் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
    • காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) 7-வது முறையாக அவர் தமிழகம் வருகிறார். நாளை மாலை மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை சென்றடைகிறார்.

    அங்கு புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம் அலுவலகம் முன் பிரதமருக்கு பா.ஜ.க. சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தொடா்ந்து பனகல் பூங்கா முதல் பாண்டி பஜாா் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் வாகன பேரணி பிரசாரத்தில் பிரதமா் மோடி ஈடுபட உள்ளாா். சாலையின் இருபுறமும் நின்று பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பூக்களை தூவி பிரதமர் மோடியை வரவேற்கிறார்கள்.

    பா.ஜ.க. வேட்பாளா்கள் தமிழிசை சவுந்தரராஜன் (தென்சென்னை), வினோஜ் பி.செல்வம் (மத்திய சென்னை), பால்.கனகராஜ் (வட சென்னை) ஆகியோருக்கு ஆதரவாக பிரதமா் மோடி வாக்கு சேகரிக்கிறார்.

    ரோடு ஷோ நடைபெறும் பாண்டிபஜார் பகுதி கடை வீதிகள் அதிகம் நிறைந்த பரபரப்பான பகுதியாகும். எனவே தி.நகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ரோடு ஷோ நடைபெறும் சாலையில் உள்ள கடைகள் நாளை மூடப்படுகின்றன. ஆனால் கடைகளை மூட தேவையில்லை என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். என்றாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.

    ரோடு ஷோ நடை பெறும் இடத்தில் உயரமான கட்டிடங்களில் ஏறி நின்று போலீசார் பைனாகுலர் மூலமாக இன்று காலை முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    தி.நகர் பகுதியில் உள்ள லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளில் போலீசார் நேற்று இரவு விடிய விடிய சோதனை நடத்தினர். இன்று இரவு இந்த சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படுகிறது. தி.நகர் பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    நாளை மாலை நடைபெறும் பிரதமரின் ரோடு ஷோ தொடர்பாக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் ஆலோசனை நடத்தி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். ரோடு ஷோவில் சுமார் 40 ஆயிரம் பேர் வரை பங்கேற்க இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியினர் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய போலீசார் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். பிரதமா் மோடியின் வருகையை முன்னிட்டு பனகல் பூங்கா பகுதியில் தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளா் தமிழிசை சவுந்தரராஜன் பேரணி ஏற்பாடுகள் குறித்து நேற்று பாா்வையிட்டாா்.

    பிரதமா் மோடி வருகையையொட்டி சென்னை தியாகராயநகா் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமரின் வாகன பேரணி செல்லும் பகுதி முழுவதையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாா் சோதனை செய்தனா்.

    அந்தப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியிருப்பவா்களின் விவரங்களைச் சேகரித்து, அவா்களது அடையாள அட்டையைப் பெற்று விசாரிக்கின்றனா். அதேபோல அங்குள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள் குறித்த தகவல்களையும் சேகரிக்கின்றனா்.

    144 தடைச் சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் உள்ளிட்ட ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட உள்ளது. காவல் துறையின் தடையையும் மீறி டிரோன்களை பறக்கவிட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நிகழ்ச்சிகள் நடைபெறும் தியாகராயநகா் பகுதி, பிரதமா் மோடி தங்கும் கிண்டி கவர்னர் மாளிகை ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பிரதமர் மோடியின் வாகன ரோடு ஷோவையொட்டி, சென்னையில் 22 ஆயிரம் போலீசாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோா் தலைமையில் செய்யப்பட்டு உள்ளன.

    நாளை இரவு சென்னை ரோடு-ஷோ முடிந்ததும் பிரதமர் மோடி கிண்டி சென்று கவர்னர் மாளிகையில் தங்குகிறார். அவா், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை சென்னையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் வேலூா் செல்கிறாா். அங்கு வேலூா் கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வேலூா் பா.ஜ.க. வேட்பாளா் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

    பின்னா், அங்கிருந்து ஹெலிகாப்டரில் சென்னைக்கு காலை 11.30 மணிக்கு வரும் அவா், அங்கிருந்து கோவை சூலூா் விமானப்படை தளத்துக்கு விமானத்தில் செல்கிறாா். அங்கிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பிரதமா் மோடி, நீலகிரி பா.ஜ.க. வேட்பாளா் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.

    அதன்பிறகு சூலூா் விமானப்படை தளத்துக்கு திரும்பும் பிரதமா், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு விமானத்தில் செல்கிறாா்.

    Next Story
    ×