search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தகுதியான அனைவருக்கும் ரூ.1000 கிடைக்க உறுதியான நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    தகுதியான அனைவருக்கும் ரூ.1000 கிடைக்க உறுதியான நடவடிக்கை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • விண்ணப்பங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு தரவுகள் மூலம் சரி பார்க்கப்பட்டது.
    • அரசு அலுவலர்கள் கள ஆய்வுகளை நடத்தி விண்ணப்பத்தாரர்களின் தகுதியை சரி பார்த்தனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இன்று காலை சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயதநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு மனு தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் சாத்தூர் தாலுகாவில் மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பித்திருந்த பெண்ணிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்போனில் பேசினார். அப்போது எந்த காரணத்திற்காக மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டது என கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் அளித்தார். தொடர்ந்து உரிய தகுதிகள் இருந்தால் மகளிர் உரிமை தொகை கண்டிப்பாக கிடைக்கும் என அமைச்சர் கூறினார்.

    ஆய்வு முடிந்து வெளியே வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சமூகத்தில் அவர்கள் சுய மரியாதையோடு வாழவும் தலா ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார்.

    அதன்படி மாநிலம் முழுவதும் கடந்த ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 4-ந்தேதி வரை முதல் கட்டமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மேற்கண்ட 2 கட்டங்களிலும் விடுபட்டவர்களுக்கு ஆகஸ்டு 18 முதல் 20-ந்தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் அரசின் பல்வேறு தரவுகள் மூலம் சரி பார்க்கப்பட்டது. மேலும் அரசு அலுவலர்கள் கள ஆய்வுகளை நடத்தி விண்ணப்பத்தாரர்களின் தகுதியை சரி பார்த்தனர். இதனை தொடர்ந்து 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக ரூ.1000 மகளிர் உரிமை தொகை செலுத்தப்பட்டது.

    கலைஞர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதிகள் சரி பார்க்கப்படுகிறது. அரசாணையில் குறிப்பிட்டு உள்ளபடி தகுதிகள் பூர்த்தி செய்யபடாவிடில் நிராரிக்கப்படுகிறது. விண்ணப்பங்களின் நிலைமை குறித்து விண்ணப்பித்தவர்களின் செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. நிராரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய நிராகரிக்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    இதற்கான காலக்கெடு கடந்த 24-ந்தேதியோடு முடிவடைந்தது. நேற்று மாலையுடன் மேல்முறையீட்டு மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 87 ஆயிரம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதனை 30 நாட்களுக்குள் பரிசீலனை செய்து உரிய தகவல் தர அறிவுறுத்தப்பட்டது.

    இதில் ஏற்கனவே பெற்ற 7 லட்சத்து 71 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 4 லட்சத்து 35 ஆயிரம் மனுக்கள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 3 லட்சத்து 74 ஆயிரம் மனுக்கள் மீது கள ஆய்வு நடத்தப்படும்.

    மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உரிய பரிசீலனை நடத்தி தகுதியான அனைவருக்கும் விடுபடாமல் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பணிகளை வேகப்படுத்துமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அரசு மூலம் நமது முதலமைச்சர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    மகளிர் உரிமை தொகைக்கு புதிதாக விண்ணப்பம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தி அறிவிப்பை வெளியிடுவார்.

    கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். தி.மு.க. ஒருபோதும் வன்முறையை ஆதரிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×