என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரியை நாடுங்கள்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்
- வடகிழக்கு பருவமழை நோய் பாதிப்பை கண்காணிக்க 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- ஒரு தெருவிலோ, சிற்றூரிலோ 3 நபர்களுக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி, பரிசோதனை நடைபெறும்.
சென்னை:
தியாகராய நகரில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மழைக்கால நோய் பாதுகாப்புகள் கட்டுக்குள் இருக்கிறது. 2017-ல் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தது. 65 பேர் உயிரிழந்தனர்.
தற்போது சென்னை, கோவை, திருப்பத்தூர், தேனி, தஞ்சை, நெல்லை, நாமக்கல், கிருஷ்ணகிரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் டெங்கு அதிகரிக்க தொடங்கி உள்ளன. அதே போல் உன்னி காய்ச்சல் கடலூர், சென்னை, தஞ்சை மாவட்டங்களிலும், எலி காய்ச்சல் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களிலும், மஞ்சள் காமாலை சென்னை, திருச்சி, தேனியிலும் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி 1 முதல் நேற்று வரை தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் 6,566 பேர், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்-390 பேர், புளுயன்சா காய்ச்சல்-56 பேர், எலி காய்ச்சல்-1481 பேர், உன்னி காய்ச்சல்-2,639 பேர், வெறி நாய்கடி-22 பேர், மஞ்சள் காமாலை பாதிப்பு-17,500 பேர்.
இதில் டெங்கு பாதித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் உரிய நேரத்தில் டாக்டர்களை அணுகாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுகுங்கள்.
வரும் மாதங்களில் வடகிழக்கு பருவமழை நோய் பாதிப்பை கண்காணிக்க 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஒரு தெருவிலோ, சிற்றூரிலோ 3 நபர்களுக்கும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவக் குழுக்களை அனுப்பி, பரிசோதனை நடைபெறும்.
அப்போது வீடு தோறும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் உள்ள 2992 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து தினமும் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள் பற்றிய தகவலை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.
கேரளாவில் பரவி வரும் நிபா வைரசை தடுக்க எல்லைகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஜெ.கருணாநிதி எம்.எல்.ஏ., மண்டல தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






