search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து... 21-ந்தேதி தண்டனை விபரம் அறிவிப்பு...
    X

    அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து... 21-ந்தேதி தண்டனை விபரம் அறிவிப்பு...

    • பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.
    • பொன்முடி, விசாலாட்சி அகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின் போது 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.

    இவரது மனைவி விசாலாட்சி. இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 2015-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சுந்தரமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 36 லட்சத்திற்கு மேல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. ஆந்திர மாநில பத்திர பதிவுத்துறை தாசில்தார் மற்றும் வங்கி அதிகாரிகள் உட்பட 39 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. பொன்முடி மீது போலீஸ் தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் வழங்கப்பட்டன.

    இதை பொன்முடி தரப்பினர் மறுத்தனர். இருதரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதனால் அவர்களை விடுதலை செய்கிறேன் என்று கூறியிருந்தார். இதை எதிர்த்து ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

    இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று அவர் பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் 4 ஆண்டுகள் தாக்கல் செய்த வருமான வரித்துறை கணக்கின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்து கீழ் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதை ஏற்க முடியாது. இவ்வாறு வருமான வரித்துறைக்கு அளித்த கணக்கின் அடிப்படையில் குற்றவியல் வழக்கில் ஒருவரை விடுதலை செய்ய முடியாது.

    மேலும் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை பொன்முடி அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சராக கணவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவிக்கும்போது, அதற்கு மனைவியும் பொறுப்பாவாரா? என்ற கேள்வி எழுகிறது.

    ஆனால், அவர் பெயரிலும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதால், அதற்கு அவரும் பொறுப்பாவார் என்று முடிவு செய்கிறேன். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம்.

    இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

    Next Story
    ×