search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 மாநில தேர்தலிலும் மோடி பிரசாரத்தால் பா.ஜனதா பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்: கே.எஸ்.அழகிரி
    X

    5 மாநில தேர்தலிலும் மோடி பிரசாரத்தால் பா.ஜனதா பல தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்: கே.எஸ்.அழகிரி

    • தேர்தல் களத்தில் மோடியும், அமித்ஷாவும் பிரசாரம் செய்தால் வெற்றி என்கிறார்கள் பா.ஜனதாவினர்.
    • கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் இருவரும் கை கோர்த்து பிரசாரத்துக்கு சென்றார்கள். ஆனால் ‘கை’ வென்றது.

    சென்னை:

    நேரு பிறந்த நாளையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு முகம் கொடுத்தவர் நேரு. ஒரு குண்டூசி கூட செய்ய முடியாத நிலையில் இருந்த இந்தியாவை உலகின் தொழிற்கூடமாக உருவாக்கினார்.

    ஒரு வேளை சோற்றுக்கு அமெரிக்காவை எதிர்பார்த்த நிலையில் ஐந்து ஆண்டு திட்டங்கள் மூலம் பசுமை நிறைந்த நாடாக உருவாக்கினார்.

    இதர பிற்பட்ட சமூகத்துக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கிறார் மோடி. சிறந்த கல்வி கற்பதும், வேலை செய்வதும் எல்லோருக்குமான வாய்ப்பாக இல்லாத காலகட்டத்தில் முதல் அரசியல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்து ஓ.பி.சி.க்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுத்து முன்னேற வைத்து சமூக நீதியை நிலை நாட்டினார்.

    தேர்தல் களத்தில் மோடியும், அமித்ஷாவும் பிரசாரம் செய்தால் வெற்றி என்கிறார்கள் பா.ஜனதாவினர்.

    கர்நாடகத்தில் நடைபெற்ற தேர்தலில் இருவரும் கை கோர்த்து பிரசாரத்துக்கு சென்றார்கள். ஆனால் 'கை' வென்றது. அவர்கள் கைகளுக்கு செல்வாக்கு இல்லாமல் போனது. தோற்றார்கள் என்பது மட்டுமல்ல 33 தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தார்கள். இதுதான் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் மக்கள் கொடுத்த பரிசு.

    இப்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மீண்டும் இதே நிலையை சந்திப்பார்கள். பல தொகுதிகளில் டெபாசிட்டை இழக்கும் வகையில் படுதோல்வியை சந்திப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×