search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருணாநிதிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு உருவ சிலை- தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்
    X

    கருணாநிதிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு உருவ சிலை- தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்

    • சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
    • தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திடக் கூட்டம் தீர்மானிக்கிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பொன்முடி, கனிமொழி எம்.பி., ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, பூச்சி முருகன் உள்பட 40-க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    ஒரு நூற்றாண்டுகால திராவிட இயக்க வரலாற்றில் முக்கால் நூற்றாண்டுகாலப் பங்களிப்பாளர், அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர், களம் கண்ட 13 தேர்தல்களிலும் வெற்றி கண்ட சாதனையாளர், ஐந்து முறை தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் நலன் விளைவிக்கும் திட்டங்களை வழங்கியவர்.

    மூத்த அரசியல் தலைவர், இலக்கியம்-கவிதை-இதழியல்-நாடகம்-திரைப்படம் எனத் தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர், திருக்கு வளையில் பிறந்து-திருவாரூரில் வளர்ந்து-உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞரின் நூற்றாண்டு விழா 2023 ஜூன் 3-ந் தேதி நாள் தொடங்குகிறது.

    தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினர் அவரை என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் நூற்றாண்டு விழாவினை எழுச்சியோடும் உணர்ச்சியோடும் எங்கெங்கும் நடத்திடக் கூட்டம் தீர்மானிக்கிறது.

    ஜூன் 3-ந் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாப் பொதுக் கூட்டம் வட சென்னையில் நடைபெற இருக்கிறது.

    ஜூன் 20-ந் தேதி திருவாரூரில் எழிலுற அமைக்கப்பட்டு உள்ள கலைஞர் கோட்டத்தினை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைத்துச் சிறப்பிக்க உள்ளார். இந்த விழா, முழுநாள் நிகழ்வாகக் கவியரங்கம், பட்டிமன்றம், பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக நடைபெற விருக்கிறது.

    கலைஞரின் நூற்றாண்டு விழாவினை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 2023 ஜூன் 3-ந் தேதி தொடங்கி, 2024 ஜூன் 3-ந் தேதி வரை ஓராண்டு காலத்திற்குத் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு நடத்திட வேண்டும்.

    ஜூன் 3-ந் தேதி கிளைக் கழகங்கள் தொடங்கி, அனைத்து அமைப்புகளின் சார்பிலும் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்க ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.

    கிளைக் கழகங்களில் அமைந்துள்ள நமது பழைய கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

    மாவட்டங்கள் தோறும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி-அனுமதி பெற்று, "எங்கெங்கும் கலைஞர்" என்ற அடிப்படையில், கலைஞரின் முழு உருவச் சிலை, மார்பளவு சிலைகளை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் அளவில் 70 வயதுக்கும் மேலான, கழக மூத்த முன்னோடிகளுக்குப் "கழகமே குடும்பம்" எனும் தலைப்பில், பொற்கிழி வழங்க வேண்டும். கழகத்தின் மூத்த முன்னோடிகளின் இல்லங்களுக்கு கழக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று கவுரவிக்க வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் "என்றென்றும் கலைஞர்" எனும் தலைப்பில், கருத்தரங்கம், பொதுக் கூட்டம் போன்ற நிகழ்வுகளும் நடத்தப்பட வேண்டும்.

    கணினி, இண்டர்நெட் வசதிகளுடன் கூடிய நவீனமான கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களைத் தொடங்கிட வேண்டும்.

    கலைஞரின் புகழை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிலைபெறச் செய்யும் வகையில் அவரது நூற்றாண்டு விழாவினை முனைப்பாகவும் பயனுள்ள வகையிலும் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது எனக் கூட்டம் தீர்மானிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×