search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் கமிஷனின் 2-வது கடிதத்தையும் ஏற்க மறுப்பு: எடப்பாடி பழனிசாமி அணி திருப்பி அனுப்பியது
    X

    தேர்தல் கமிஷனின் 2-வது கடிதத்தையும் ஏற்க மறுப்பு: எடப்பாடி பழனிசாமி அணி திருப்பி அனுப்பியது

    • 2-வதாக வந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர்.
    • தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ள நிலையில் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வை வழி நடத்தி செயல்பட்டு வருகின்றனர்.

    தற்போது வரை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகம் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அ.தி.மு.க.வுக்கு வருகிற கடிதங்கள் அனைத்தும் தலைமைக் கழகத்துக்கு தான் அனுப்பப்படுகிறது.

    அந்த வகையில் தேர்தல் கமிஷனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் கடிதங்களும் அ.தி.மு.க.வின் தலைமை கழகத்துக்குதான் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அண்மையில் இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதம் கூட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெயரிட்டு ராயப்பேட்டையில் உள்ள அதி.மு.க. தலைமைக் கழகத்துக்கு வந்திருந்தது.

    இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சட்ட ஆணையத்துக்கு தங்களது ஆட்சேபனைகளையும் தெரிவித்திருந்தனர்.

    இப்படி எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்று வரும்போது ஒருவர் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசதிக்காக ஆர்.வி.எம். என்ற புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை (ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) தலைமை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

    இது தொடர்பாக வருகிற 16-ந்தேதி ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்தந்த மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் கருத்து கேட்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    அது மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு யார் பெயரில் கடிதம் அனுப்ப வேண்டும் என்று அந்த கடிதத்தில் விளக்கி இருந்தது.

    அதன்படி அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கும், தி.மு.க., பா.ம.க.வில் தலைவர்களுக்கும், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் பொதுச் செயலாளர்களுக்கும் பதவிகளை குறிப்பிட்டு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று கூறி இருந்தது.

    இந்திய தேர்தல் கமிஷனின் இந்த விளக்க கடிதம் கடந்த வியாழக்கிழமை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு கிடைத்ததும் அதன் அடிப்படையில் அவர் ஒவ்வொரு கட்சிக்கும் தேர்தல் கமிஷனின் தபால் பட்டுவாடாவை ஊழியர் மூலம் (மெசேஞ்சர்) ஒவ்வொரு கட்சிக்கும் கொடுத்து அனுப்பினார். அதில் ஒருங்கிணைப்பாளர்-இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்ததால் அந்த கடிதத்தை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளாமல் வியாழக்கிழமையே திருப்பி அனுப்பி விட்டனர்.

    இதன் பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மறுபடியும் வெள்ளிக்கிழமை ஸ்பீடு போஸ்ட் மூலம் அ.தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைத்தார்.

    2-வதாக வந்த அந்த கடிதத்தையும் தலைமைக் கழகத்தில் வாங்காமல் தேர்தல் கமிஷனுக்கு திருப்பி அனுப்பி விட்டனர். தபால் திரும்பி வந்ததற்கான அத்தாட்சி நேற்று தேர்தல் கமிஷனுக்கு வந்து விட்டது.

    இதனால் 16-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க. பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கூறுகையில், "அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிதான் உள்ளது என்றும் இந்திய தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே 3 கடிதங்கள் கொடுத்து இருக்கிறோம்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூடிய விவரங்கள், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளோம்.

    எனவே இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு மறுபடியும் கடிதம் அனுப்ப வேண்டும் என எதிர்பார்ப்பதாக" தெரிவித்தார்.

    எனவே வருகிற 16-ந்தேதி கூடும் தேர்தல் கமிஷன் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் யார்-யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×