search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம்- எடப்பாடி பழனிசாமி
    X

    மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம்- எடப்பாடி பழனிசாமி

    • பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகிவிட்டது.
    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புது முகங்கள் பலர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகிவிட்டது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிட்டு இருக்கிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும்.

    எங்களது கூட்டணியில் தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம், மனித நேய மக்கள் கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் புது முகங்கள் பலர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை மக்கள் தேர்வு செய்து நிச்சயம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள். அவர்களது குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.

    கே: அ.தி.மு.க. சார்பில் கடந்த முறை அன்புமணி ராமதாசுக்கு மேல்சபை எம்.பி. வழங்கி இருந்தீர்கள். அவர்கள் தற்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து இருப்பது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறதா?

    ப: மேல்சபை எம்.பி. பதவி கொடுத்தது பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வராததால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. அ.தி.மு.க. சொந்த காலில் நிற்கும் கட்சியாகும். கூட்டணிக்கு யாரையும் வற்புறுத்தி இழுத்து வர முடியாது.


    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனியாக நின்று மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி கூட்டணி அமைப்பவர்களை வரவேற்போம். அதே நேரத்தில் வராதவர்கள் பற்றி கவலை இல்லை.

    அ.தி.மு.க. தொண்டர்களை பொறுத்தவரை தேர்தல் காலங்களில் அ.தி.மு.க.வுக்கு உழைப்பதைவிட பல மடங்கு கூட்டணி கட்சியினருக்காகவும் இரவு-பகல் பாராமல் உழைத்து அவர்களை வெற்றிபெறவும் வைப்பார்கள்.

    கே: தமிழகத்தில் பா.ஜனதா அமைத்துள்ள கூட்டணி பற்றி உங்கள் கருத்து என்ன?

    ப: மற்றவர்கள் அமைத்து உள்ள கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டியது இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு முடிவு இருக்கும். அ.தி.மு.க.வில் 2 கோடியே 6 லட்சம் தொண்டர்கள் உள்ளனர். 30 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்து இருக்கிறோம்.

    2014-ம்ஆண்டு தேர்தலில் 3-வது பெரிய கட்சியாக பாராளுமன்றத்தில் இருந்தோம். எனவே தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் தான் முடிவு செய்வார்கள். வருகிற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்கள் நிச்சயம் வெற்றி பெற வைப்பார்கள்.

    கே: பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தி அ.தி.மு.க. ஓட்டு கேட்க முடியாத நிலை உள்ளதா?

    ப: நாங்கள் மட்டுமா அதுபோன்று பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறோம். நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் அதுபோன்று தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேர்தலில் தமிழக மக்கள் அ.தி.மு.க.வை நிச்சயம் ஆதரிப்பார்கள். நாங்கள் மக்களோடுதான் கூட்டணி வைத்து இருக்கிறோம்.

    தி.மு.க. ஆட்சியில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்கு கொடுத்து கடந்த முறை வெற்றி பெற்றது. 38 எம்.பி.க்கள் எதுவும் பேசவில்லை.

    வருகிற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அவை தலைவர் தமிழ்மகன்உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பா.வளர்மதி, கோகுலஇந்திரா, மாதவரம் மூர்த்தி, விஜயபாஸ்கர், வைகைசெல்வன், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், தி.நகர் சத்யா, முன்னாள் எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    Next Story
    ×