search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை அருகே விபத்து- கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கப்பல் ஊழியர் உள்பட 4 பேர் பலி
    X

    மதுரை அருகே விபத்து- கண்டெய்னர் லாரி மீது கார் மோதி கப்பல் ஊழியர் உள்பட 4 பேர் பலி

    • பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது.
    • தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது.

    திருமங்கலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் செங்குடியை அடுத்த செங்கண்குழிவிளை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன்கள் ஜேம்ஸ் மார்ட்டின் (வயது 34), சாம் டேவிட்சன் (30). இதில் ஜேம்ஸ் மார்ட்டின் கப்பலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தனது தம்பியான சாம் டேவிட்சனையும் கப்பலில் வேலைக்கு சேர்க்க விரும்பினார். இதற்கான பயிற்சிக்காக சென்னைக்கு தன்னுடன் அழைத்து செல்ல திட்டமிட்டார்.

    அவர்களுடன் ஜேம்ஸ் மார்ட்டினின் பெரியப்பா மகன் கமலேஷ் (50) என்பவரும் சென்னை செல்ல தயாரானார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஒரே காரில் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி சென்னைக்கு புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 2 மணியளவில் அந்த கார் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் கள்ளிக்குடியை அடுத்த விருதுநகர் மாவட்ட எல்லையான நல்லமநாயக்கன்பட்டி விலக்கு அருகே வந்துகொண்டிருந்தது. மின்னல் வேகத்தில் வந்த அந்த கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது.

    காரை ஓட்டி வந்த ஜேம்ஸ்மார்ட்டின் அதனை நிறுத்த முயன்றார். ஆனால் தாறுமாறாக ஓடி அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோதியது. ஆனாலும் வேகம் கட்டுக்குள் வராததால் நிற்காமல் சென்ற கார் தடுப்புசுவரையும் தாண்டி எதிர்திசை நோக்கி பாய்ந்தது.

    அப்போது பெங்களூருவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றிக் கொண்டு மதுரை வழியாக விருதுநகர் நோக்கி மினி கண்டெய்னர் லாரி ஒன்று சென்றது. தடுப்புச்சுவரை தாண்டி பாய்ந்த கார் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதியது. இதில் அந்த லாரி நான்குவழிச்சாலையில் கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் காரில் வந்த மூன்று பேர் மற்றும் கண்டெய்டனர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுரை விரகனூரைச் சேர்ந்த செல்வகுமார் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதற்கிடையே தாறுமாறாக எதிர்திசையில் பாய்ந்த காரை பார்த்ததும் அந்த வழியாக வந்த வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    சினிமா படப்பிடிப்பில் நடப்பது போன்ற பிரமிப்பை இந்த விபத்து ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளிக்குடி போலீசார் மற்றும் கள்ளிக்குடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய காருக்குள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து கிடந்த நான்கு பேரின் உடல்களையும் நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

    பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தால் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×