search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இன்று மாலை டெல்லி செல்லும் அண்ணாமலை:  3-வது அணி அமைப்பது குறித்து அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனை
    X

    இன்று மாலை டெல்லி செல்லும் அண்ணாமலை: 3-வது அணி அமைப்பது குறித்து அமித்ஷாவுடன் முக்கிய ஆலோசனை

    • டெல்லியில் இன்று இரவு பா.ஜ.க. மேலிடத் தலைவர்களை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
    • பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணியை முடிவு செய்வோம் என்று அறிவித்துள்ளன.

    தமிழகத்தில் அ.தி.மு.க.- பாரதிய ஜனதா இடையே இருந்த கூட்டணி முறிந்து போனதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்த கடுமையான விமர்சனங்கள்தான் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர்களை தொடர்ந்து அண்ணாமலை விமர்சித்ததால் ஏற்கனவே கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜனதா இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. விலகி சென்றதால் அடுத்து என்ன செய்வது என்பது பற்றி டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதை ஏற்று இன்று காலை அண்ணாமலை கோவையில் இருந்து டெல்லி செல்வதாக இருந்தது. ஆனால் கோவையில் தூய்மை பணி திட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் காலையில் அவர் செல்வதாக இருந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.20 மணிக்கு கோவையில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் அண்ணாமலை புறப்பட்டு செல்கிறார்.

    டெல்லியில் இன்று இரவு பா.ஜ.க. மேலிடத் தலைவர்களை அண்ணாமலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இல்லையெனில் நாளை காலை முதல் மதியம் வரை அடுத்தடுத்து பா.ஜ.க. மூத்த தலைவர்களான அமித்ஷா, ஜே.பி.நட்டா, பி.எல். சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    இதற்காக அண்ணாமலை அறிக்கை ஒன்றை தயார் செய்து கொண்டு செல்வதாக தெரிய வந்துள்ளது. அந்த அறிக்கையில் அவர் தமிழக பா.ஜ.க. தொடர்பான பல்வேறு தகவல்களை தொகுத்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக பா.ஜ.க.வில் முடிவுகள் எடுக்கப்பட்டால் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று வலியுறுத்த உள்ளார்.

    இதுவரை இருந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னே்றறக் கழகம், ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டதும், இந்த தோழமைக் கட்சிகள் என்ன முடிவு எடுப்பது? யார் பக்கம் போவது? என்பதில் தொடர்ந்து குழப்பத்துடன் உள்ளன. கூட்டணி தொடர்பாக இந்த கட்சிகள் இதுவரை உறுதியாக முடிவு எடுக்கவில்லை.

    பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணியை முடிவு செய்வோம் என்று அறிவித்துள்ளன. எனவே இந்த கட்சிகள் அ.தி.மு.க. பக்கம் சாயுமா? அல்லது பா.ஜனதா பக்கம் சாயுமா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

    ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் தற்போது வரை நடுநிலையுடன் உள்ளனர். அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி நீடிக்க வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாக உள்ளது. மீண்டும் கூட்டணி ஏற்படாவிட்டால் இவர்கள் பா.ஜனதா பக்கம் சாய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் தோழமை கட்சிகளை அரவணைத்து 3-வது அணியை உருவாக்கலாம் என்று அண்ணாமலை மேலிடத் தலைவர்களிடம் நாளை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டால்தான் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று அண்ணாமலை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க. ம.தி.மு.க., ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதி கட்சி, பாரிவேந்தர் கட்சி, ஈஸ்வரன் கட்சி இடம்பெற்றிருந்தன. அந்த தேர்தலின் போது பா.ஜனதாவுக்கு 18 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன.

    தற்போது உள்ள சூழ்நிலையில் 20 முதல் 23 சதவீத வாக்குகளை பா.ஜனதா பெற முடியும் என்று அண்ணாமலை தனது அறிக்கையில் சுட்டிக்காட்ட உள்ளார். டெல்லி மேலிடத் தலைவர்கள் அண்ணாமலையின் இந்த கூட்டல், கழித்தல் கணக்குகளை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் 3-வது அணி உருவாக வாய்ப்பு ஏற்படலாம்.

    2 நாள் பயணமாக டெல்லி செல்லும் அண்ணாமலை தனது திட்டத்தை டெல்லி மேலிடத் தலைவர்களிடம் விலக்கி கூறி அனுமதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நாளை மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னை வர உள்ளார். நாளை மறுநாள் சென்னையில் பா.ஜ.க. ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    அந்த கூட்டத்தில் டெல்லி மேலிட தலைவர்களின் கருத்துக்களை அண்ணாமலை விளக்கி கூறுவார். 3-வது அணிக்கு பா.ஜ.க. மேலிடத் தலைவர்கள் அனுமதி அளிக்கும் பட்சத்தில் கூட்டணி கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்பது அடுத்தக்கட்ட எதிர்பார்ப்பாக அமையும்.

    புதிய அணிக்கு பா.ஜனதா முயற்சி செய்தால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சம்பவங்கள் நிகழ வாய்ப்பு உள்ளன.

    Next Story
    ×