search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3-ம் உலகப்போரை தடுக்க மோடியால் மட்டுமே முடியும்- அண்ணாமலை
    X

    3-ம் உலகப்போரை தடுக்க மோடியால் மட்டுமே முடியும்- அண்ணாமலை

    • நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது.
    • கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அய்யம்பாளையம் பகுதியில் 1972ம் ஆண்டு மின்சார கட்டண உயர்வு போராட்டத்தால் உயிர் நீத்த விவசாயிகள் நினைவிடத்தில் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பா.ஜ.க. மாநில தலைவருமான அண்ணாமலை இன்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அய்யம்பாளையத்தில் மிக முக்கியமான ஒரு சின்னம் உள்ளது. அதை அனைவரும் மறந்து விட்டனர். அதை நினைவு படுத்துவது நமது கடமை. இங்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கான காரணம் நமது உரிமையை நாமே ஜனநாயகத்தில் பெற்றெடுக்க வேண்டும். தியாகி சுப்பையன் மகன் ராஜேந்திரன் மற்றும் அவரது மருமகள் கவிதா ஆகியோர் எங்களுடன் இருக்கின்றனர்.

    தியாகிகளின் நினைவிடத்தில் இருந்து இன்றைய பிரசாரத்தை தொடங்குகிறோம். கடந்த ஆண்டு பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் தங்களது தோட்டத்தில் அமர்ந்து மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று வந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச்செலவை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டது.

    நேற்று நீதிமன்றம் 5 குற்றவாளிகளுக்கும் தீர்ப்பு வழங்கியுள்ளது. 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒரு நபருக்கு 6 ஆண்டு ஆயுள் தண்டனையும் வழங்கி உள்ளது.

    நீதிமன்ற தீர்ப்பு ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அந்த குடும்பத்தினரின் குழந்தைகள் பா.ஜ.க.வின் பாதுகாப்பில் உள்ளனர். காவல்துறையினர் மிக வேகமாக செயல்பட்டு இந்த வழக்கை முடித்துள்ளனர். இந்த தீர்ப்பு ஒரு விதத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும். ரஷியா -உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கு முன்பு சிரியாவில் நடந்த தாக்குதலில் ஈரான் அதிகாரிகள் இறந்தார்கள். ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் நேரடி போர் சூழல் தொடங்கியுள்ளது. இந்த போர் நேரத்தில் தான் இந்தியாவின் தலைமை இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்.

    நாட்டை பாதுகாக்க, இறையாண்மையை பாதுகாக்க 2024ல் பிரதமர் மோடியின் தலைமை மிக அவசியமாக உள்ளது. காரணம் கடினமான ஒரு சூழ்நிலைக்குள் உலகம் சென்று கொண்டிருக்கிறது.

    உலகம் முழுவதும் போர்சூழல் நிலவினாலும் மோடி பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. இப்படிப்பட்ட கடினமான சூழலிலும் 10 ஆண்டுகளில் இந்தியாவை முன்னேறிய நாடாக மோடி உயர்த்தியுள்ளார். மூன்றாம் உலக போர் சூழலை தவிர்க்க முடியும் என்றால் அது மோடி அவர்களால் மட்டுமே முடியும். அனைத்து உலக தலைவர்களிடமும் பேச முடியும் என்றால் அது மோடியால் மட்டுமே முடியும். 2029ல் மோடி உலகத்தினுடைய தலைவராக உருவெடுப்பார். உலகத்தின் முன்னணி நாடாக இந்தியா இருக்கும். பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர நாங்கள் எப்போதோ அறிவித்து விட்டோம். ஆனால் மாநில அரசுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநில அரசுக்கு வரும் வருமானம் காணாமல் போகும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த2 ஆண்டுகளில் 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை பெட்ரோல்- டீசல் விலையை குறைத்துள்ளோம்.

    கியாஸ்க்கு 300 ரூபாய் மானியம் அளித்துள்ளோம். இந்தியாவைப் பொறுத்தவரை வாக்குச்சீட்டில் இருந்து வாக்குப்பதிவு எந்திரத்திற்கு நாம் மாறிவிட்டோம். 2024 ம் ஆண்டு தோல்விக்கு பிறகும் இந்தியா கூட்டணி இது போன்ற காரணங்களை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். ஓட்டுச்சீட்டு முறை இருந்தபோது கிராம பகுதிகளில் என்னெல்லாம் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கள்ள ஓட்டு தடுக்கப்பட்டுள்ளது. இந்தியா தொழில்நுட்பத்தில் வேற லெவலில் உள்ளது. தேர்தல் நடத்தும் முறையில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக உள்ளது. எனவே அமெரிக்காவைப் பார்த்து இந்தியா காப்பி அடிக்க வேண்டாம். இந்தியாவைப் பார்த்துதான் அமெரிக்கா காப்பியடித்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியின் போது உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் செல்லமுத்து மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×