search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும்?- அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் அடுத்த எதிர்பார்ப்பு
    X

    தேர்தல் ஆணையம் என்ன முடிவு எடுக்கும்?- அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் அடுத்த எதிர்பார்ப்பு

    • சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழுவும், அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து விட்டது.

    இதனால் அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையின் கீழ் வந்துவிட்டதாகவே கருதுகிறார்கள்.

    ஆனாலும் ஓ.பன்னீர்செல்வம் விடவில்லை. தர்மம் வெல்லும் என்று மீண்டும் தர்மயுத்தம் நடத்துவேன் என்று அறிவித்துள்ளார்.

    பொதுக்குழு செல்லும் என்று கோர்ட்டு அறிவித்தாலும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக உரிமையியல் கோர்ட்டில் முறையிடலாம். தேர்தல் ஆணையத்தையும் அணுகலாம் என்று தெரிவித்துள்ளது. இதை தங்களுக்கு சாதகமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நம்புகின்றனர்.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அதாவது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்த போது எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக இன்னும் அங்கீகரிக்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளே இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    இதை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம், "உரிமையியல் கோர்ட்டில் சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அதன் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிலையையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் அவசர கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட விதிகளில் எந்த திருத்தமும் செய்யக்கூடாது. திருத்தங்களை ஏற்றுக்கொண்டால் அது நீதிக்கு அப்பாற்பட்டது. எனது சட்டப்பூர்வமான உரிமையை பாதிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்று தனது பொறுப்புகளையும் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் ஆணையத்தை அணுக தீர்மானித்துள்ளார். ஈரோடு தேர்தல் முடிந்ததும் அவர்கள் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கும் என்பதே அ.தி.மு.க. தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    சிவில் வழக்கு முடிவு வரும் வரை எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறினால் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும்.

    அதே நேரம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார்.

    தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொண்டால் ஓ.பன்னீர்செல்வம் நம்பி இருந்த சிறு நம்பிக்கையும் தகர்ந்து விடும்.

    எனவே என்ன சொல்லப் போகிறது தேர்தல் ஆணையம் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரையும் தாண்டி எல்லா தரப்பினரிடமும் எழுந்துள்ளது.

    Next Story
    ×