search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 அமைச்சர்கள் நீக்கமா? தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    2 அமைச்சர்கள் நீக்கமா? தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு

    • தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
    • அமைச்சர்களை சேர்ப்பதும், நீக்குவதும் இலாக்காக்களை மாற்றி அமைப்பதும் முதலமைச்சர் முடிவு என்பதால் அவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகி புதிய அரசு அமையும் போது தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றத்தை கொண்டு வர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    தேர்தல் தொடங்குவதற்கு முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசும்போது தேர்தலில் வாக்குகள் குறைந்தால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் தான் பதில் சொல்ல வேண்டும். யாராக இருந்தாலும் நான் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார்.

    இப்போது தி.முக. கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும் தேர்தல் வேலைகளில் சரிவர செயல்படாதவர்கள் பற்றியும் புகார்கள் சென்றுள்ளன.

    அந்த வகையில் 10 அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்கள் சொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    இதனால் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஒருவித கலக்கத்துடனேயே உள்ளனர். யார் யாருக்கு இலாகா மாறுமோ என்ற அச்சத்தில் சந்தோஷமின்றி மன இறுக்கத்திலேயே உள்ளனர்.

    இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு முன்னதாகவே 2 அமைச்சர்கள் பதவியும் பறிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி வருகிறது.


    இது பற்றி தி.மு.க. வட்டாரத்தில் பேசும் பொருளாக கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் உடல்நலம் காரணமாகவும் செயல்பாடுகளாலும் அமைச்சரவையில் இருந்து மாற்றப்படலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வசம் உள்ள மணல் குவாரி, சுரங்கங்கள் மற்றும் கனிம வளத்துறையை வேறு ஒரு அமைச்சருக்கு பிரித்துக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    மணல் குவாரி மற்றும் கனிமவளத்துறையில் நடந்த புகார்கள் காரணமாக அமலாக்கத்துறை விசாரணை தீவிரமாகி வரும் நிலையில் இந்த மாற்றங்களை செய்ய முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாவும் தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    ஆனால் அமைச்சர் துரைமுருகன் கனிம வளத்துறையை விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே தெரிகிறது. அதற்கு பதிலாக நீர்வளத்துறையை வேண்டுமானால் அவர் விட்டுக் கொடுப்பார் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இதற்கு முன்பு நிதித்துறையை கவனித்து வந்த தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அவருக்கு மத்திய நிதியமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.


    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை மாற்றி அமைக்கும் போது எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ.வான சேலத்தை சேர்ந்த பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை அமைச்சரவையில் சேர்க்க வாய்ப்புளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    அமைச்சர்களை சேர்ப்பதும், நீக்குவதும் இலாக்காக்களை மாற்றி அமைப்பதும் முதலமைச்சர் முடிவு என்பதால் அவர் என்ன நினைக்கிறார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

    Next Story
    ×