search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பிரதமர்.. I.N.D.I.A. கூட்டணியை கிண்டலடித்த அண்ணாமலை
    X

    வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பிரதமர்.. I.N.D.I.A. கூட்டணியை கிண்டலடித்த அண்ணாமலை

    • மத்திய அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.
    • ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை கடந்த 9 ஆண்டுகளில் பிரதமரால் கிடைத்துள்ளது.

    ராமேஸ்வரம்:

    மத்திய பாஜக அரசின் கடந்த 9 ஆண்டு கால சாதனைகளை தமிழக மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில், 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கி உள்ளார். ராமேசுவரத்தில் நடந்த விழாவில் மத்திய மந்திரி அமித் ஷா கலந்துகொண்டு, நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

    தொடக்க விழாவில் அண்ணாமலை பேசியதாவது:-

    இந்த யாத்திரை பாஜகவின் ஒவ்வொரு தொண்டனின் யாத்திரை. தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களின் ஆசியுடன் நடைபெற உள்ள யாத்திரை. என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. பிரதமர் மோடியின் சாதனைகளை தமிழகத்தில் விளக்கவே இந்த யாத்திரை நடத்துகிறோம்.

    மத்திய அரசின் சாதனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு பணிகளை செய்திருக்கிறது. தமிழகத்திற்கு மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வந்திருக்கிறது. எந்த ஆட்சியிலும் வராத பணம் இது. எந்த ஆட்சியிலும் வராத ஏராளமான திட்டங்கள் இங்கு வந்திருக்கின்றன. ஆயிரம் ஆண்டுகளில் தமிழுக்கு கிடைக்காத பெருமை 9 ஆண்டுகளில் பிரதமரால் கிடைத்துள்ளது.

    நம்முடைய கூட்டணியைப் பொருத்தவரை நிரந்தரமாக இருக்கக்கூடிய பிரதமர் நம்மிடம் இருக்கிறார். ஆனால் I.N.D.I.A. என்ற பெயரில் ஒரு கூட்டணி இருக்கிறது. இந்த கூட்டணியை வைத்துக்கொண்டு திங்கட்கிழமை நிதிஷ் குமார் பிரதமர், செவ்வாய்க்கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், புதன் கிழமை கேசிஆர் பிரதமர், வியாழக்கிழமை தாக்கரே பிரதமர், வெள்ளிக்கிழமை இன்னொருவர் புதிதாக சேருபவர் பிரதமர். ராகுல் காந்தி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பிரதமர். ஏனென்றால் அன்றுதான் விடுமுறை. சனி, ஞாயிறுக்கு பிரதமராக இருக்கக்கூடிய ராகுல் காந்தியை கொண்டு வந்து I.N.D.I.A. என்கிறார்கள்.

    இந்தியாவை தன்னுடைய மூச்சாக, தன்னுடைய டிஎன்ஏவாக, தன்னுடைய ரத்தமாக, தன்னுடை சதையாக, தன்னுடைய எலும்பாக வைத்துக்கொண்டு வேலை செய்துகொண்டிருக்கும் நம்முடைய பிரதமர் மோடி மறுபடியும் ஐந்தாண்டுகள் பிரதமராக வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×