search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியபாளையம் அருகே அடுத்தடுத்த மூன்று கோவில்களில் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு

    • பூட்டை உடைத்து ஒன்றரை சவரன் தாலி-ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
    • கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ தரணீஸ்வரர் திருக்கோவில் மற்றும் இதன் அருகே பொன்னியம்மன் திருக்கோவில் ஆகியவை உள்ளது. இக்கோவில்களுக்கு அருகே கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,முக்கரம்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த மாம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில், இக்கோவில்களின் அர்ச்சகர்கள் நேற்று இரவு கோவில்களை மூடிக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

    இன்று காலை பூஜை செய்ய கோவிலுக்கு வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத தரணீஸ்வரர் திருக்கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் தாலி மற்றும் பொன்னியம்மன் கோவிலிலிருந்த உண்டியல், ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவிலில் பக்தர்களின் காணிக்கை பணம் ரூ.30,000 ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும், மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்ற விவசாயின் நிலத்தில் இருந்த டிராக்டரையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அங்கு வைத்திருந்த சுமார் 35 லிட்டர் டீசலை கீழே கொட்டி விட்டு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பைகளை சேதப்படுத்திவிட்டு சென்றிருந்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலையம் மற்றும் ஊத்துக்கோட்டை காவல் நிலையம் ஆகியவற்றில் கிராம மக்கள் மற்றும் விவசாயி பன்னீர்செல்வம் ஆகியோர் புகார் செய்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஏழுமலை ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×