search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனவகிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
    X

    மறியலில் ஈடுபட்ட மீனவ பெண்களை படத்தில் காணலாம். 

    மீனவகிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • மீனவ பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் மீன்பிடித்து வந்து தங்களது படகுகளை தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பது வழக்கம். தந்திராயன்குப்பம் அருகே உள்ள மீனவ கிராமம் சின்னமுதலியார் சாவடி. இந்த கிராமத்திலும் அதிகமான மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதனையடுத்து சின்னமுதலியார்பேட்டை சாவடியில் உள்ள மீனவர்கள் சில நாட்களாக தங்களது படகுகளை சின்னமுதலியார் சாவடி கடற்கரை ஓரமாக நிறுத்தாமல் தந்திராயன்குப்பம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வருகின்றனர். இதனால் தந்திராயன்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை அவர்களது பகுதி கடற்கரை ஓரங்களில் நிறுத்த இடமில்லாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் படகுகளை கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைப்பதில் மீனவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்தது.

    இதனை கண்டித்து தந்திராயன்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விழுப்புரம் மாவட்ட கலெக்டரிடமும், வானூர் தாசில்தாரிடமும் பலமுறை மனு அளித்தனர். ஆனால் இதுநாள் வரை அந்த மனுவிற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தந்திராயன்குப்பம் மீனவர்கள் ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோட்டக்குப்பம் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்படைந்து வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சமீபகாலமாக தங்கள் பகுதி மீனவ கிராமத்திற்கு பக்கத்து மீனவ கிரமமான சின்னமுதலியார் சாவடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை அவர்கள் பகுதி கடற்கரையில் நிறுத்தாமல் எங்களது பகுதி கடற்கரை ஓரமாக நிறுத்துகின்றனர். இதனால் நாங்கள் எங்களது படகுகளை கடற்கரை ஓரமாக நிறுத்த இடமில்லாமல் தினந்தோறும் அல்லல்பட்டு வருகிறோம். இதனை சரிசெய்ய பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அந்த மனுவிற்கு இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பிரச்சனைக்கு அதிகாரிகளால் தீர்வு எடுக்க வேண்டும் என்றும், நாங்கள் அளித்த மனுவிற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி இந்த சாலை மறியலில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சாலை மறியலில் ஈடுபட்டபோது அங்கு இருந்த சில பெண்கள் மற்றும் ஆண்கள் தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை கையில் எடுத்து அவர்கள் மீது ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முற்பட்டனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த (பெண்) போலீசார் அவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர்களை மீட்டனர். இதனையடுத்து சம்பந்தபட்ட அதிகாரிகள் மூலம் இந்த பிரச்சினைக்கு உடனடியா தீர்வு எடுக்கப்படும் என போலீசார் கூறியதின்பேரில் மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். ஆனால் அதிகாரிகள் எங்களிடம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி கலைந்து செல்லாமல் அங்கேயே கூட்டம் கூட்டமாக நின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பெரும் பதட்டமாக உள்ளது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். படகுகளை கடற்கரை ஓரமாக நிறுத்துவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மீனவ பெண்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×