search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை
    X

    ஆடிட்டர் வீட்டின் பூட்டை உடைத்து 150 பவுன் நகை கொள்ளை

    • பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு என்.ஜி.ஓ. காலனி, 7-வது வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஆடிட்டர். இவரது மனைவி சாதனா. இவர் தனியார் கல்லூரி பேராசிரியை. இவர்களது ஒரே மகன் ஆம்புரோஸ் பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று சுப்பிரமணி தேனியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்று விட்டார். சுப்பிரமணி வாடகை வீட்டில் மேல்மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் உரிமையாளரின் மகன் மேல் மாடிக்கு சென்ற போது சுப்பிரமணி வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் சுப்பிரமணிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். உடனே சுப்பிரமணி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்பிரமணி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 150 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    தகவல் கிடைத்ததும் டவுன் டி.எஸ்.பி ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் வைரம் ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சுப்பிரமணி தற்போது ஈரோடு வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகுதான் மேலும் வெள்ளிப்பொருட்கள், வேறு ஏதேனும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதா என்பது குறித்து முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×