search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமைச்சர் உதயநிதியின் பிரசார பேச்சு கருணாநிதியை நினைவுப்படுத்தியது: தி.மு.க. தலைமை பெருமிதம்
    X

    அமைச்சர் உதயநிதியின் பிரசார பேச்சு கருணாநிதியை நினைவுப்படுத்தியது: தி.மு.க. தலைமை பெருமிதம்

    • தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாகும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரத்தை தி.மு.க. தலைமை பாராட்டி உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க.வின் இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்தான் அவரை தனித்தன்மை வாய்ந்த பிரசார நாயகனாக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. கருணாநிதி எந்த ஊரில் பேசினாலும் அந்த ஊரில் தி.மு.க.வை வளர்த்த தலைவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் சிறப்பை, தியாகத்தை எடுத்துக் கூறுவார். அந்த ஊரிலிருந்த சிறந்த தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைப்பார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சும் அதே பாணியில் அமைந்திருந்ததை இந்த பிரசாரத்தில் காண முடிந்தது. தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார். கருணாநிதியை போலவே, தொண்டர்களுடன் நம் உதயா (உதயநிதி ஸ்டாலின்) கலந்துரையாடி மகிழ்கிறார் என்று பெருமையுடன் பேசிக்கொண்டார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று கடந்த 24 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகளில் 8 ஆயிரத்து 465 கிலோ மீட்டர் பயணம் செய்து, 122 பிரசார முனைகளில் 3 ஆயிரத்து 726 நிமிடங்கள் பேசியுள்ளார்.

    ஒவ்வொரு பிரசார இடங்களிலும் இளைஞர்கள், பெண்கள், முதியோர் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்து நேரடி பிரசாரம் செய்துள்ளார். இந்த பிரசார கூட்டங்களில் மட்டும் சுமார் 1 கோடியே 22 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும், தி.மு.க. தொண்டர்களையும் சந்தித்துள்ளார். இதில் அதிகமான பெண்கள் திரண்டு வந்து அவருடைய பேச்சினை ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத்தக்கது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, மத்திய அரசு 'எய்ம்ஸ்' மருத்துவமனையை மதுரையில் கட்டாததை அனைவரும் அறியும் வகையில் பொதுமக்களிடம் ஒற்றைச் செங்கல் காண்பித்து, பிரசாரம் செய்த விதம் மையமாக அமைந்தது. அந்த ஒற்றைச் செங்கல் பிரசாரம் அந்த தேர்தலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

    சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகனத்தில் திறந்த வெளியில் நின்று கொண்டும் எந்தவித தடுப்புமின்றி பிரசாரம் மேற்கொண்டார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் நேரடி மக்கள் சந்திப்பும், பொதுமக்களிடம் யதார்த்தமாக பழகிய விதமும், அவர்களிடமே கேள்விகள் கேட்டு பதில்கள் தந்த விதமும் இந்த தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய புகழையும், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவையும் பெருக்கியது என்பது உண்மை.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தனித்தன்மை வாய்ந்த பிரசார யுக்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில், ஒரு புதிய மைல்கல்லாகும். தமிழ்நாட்டின் இந்த தேர்தல் வெற்றி வருங்காலத்தில் பிரசார பணிகளை மேற்கொள்வோர்க்கு ஒரு சிறந்த வழிகாட்டும் மாடலாக திகழும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×