search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய வகை கொரோனா குறித்து அச்சம் அடைய வேண்டாம்: அமைச்சர் வலியுறுத்தல்
    X

    புதிய வகை கொரோனா குறித்து அச்சம் அடைய வேண்டாம்: அமைச்சர் வலியுறுத்தல்

    • தமிழ்நாட்டில் உள்ள 3 பல் மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள்.
    • இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ரூ.25 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் சிறப்பு பல் ஆஸ்பத்திரி, கலையரங்கம், பாதுகாவலர் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் ஜெ.சங்குமணி மற்றும் டாக்டர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள 3 பல் மருத்துவக்கல்லூரிகள் மூலம் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் அடைந்து வருகிறார்கள். இதேபோல, ரூ.64 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் 620 மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டும் பணி இந்த மாத இறுதியில் தொடங்கி வைக்கப்படவுள்ளது.

    மேலும், ரூ.135 கோடி மதிப்பீட்டில், ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியின் 750 முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்கும் வகையில் விடுதி கட்டிடம் கட்டப்பட உள்ளது. மொத்தம் ரூ.200 கோடி செலவில் ஆயிரத்து 400 மாணவர்கள் தங்கும் வகையில் 2 விடுதி கட்டிடம் இந்த மாத இறுதியில் முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட உள்ளது. விடுதிகள் கட்டும் பணி 1½ ஆண்டுகளில் முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படும்.

    ஜே.என்.1 உருமாறிய கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. கேரளாவில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குழு பாதிப்பு ஏற்படவில்லை. மிதமான பாதிப்புகள் ஏற்பட்டு 4 நாட்களிலேயே சரியாகிவிடுகிறது.

    எனவே பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை. இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். கொரோனாவிற்கு தனி வார்டு அமைக்கப்படுமா என சமூக வலைதளங்களில் சிலர் கேட்கிறார்கள். தேவையற்ற பீதியை கிளப்புகிறார்கள். தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. யாரும் பதற்றம் அடைய வேண்டாம்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 67 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். நிதிநிலை அறிக்கையில் தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களும் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை விரிவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது.

    அந்த வகையில், மிக விரைவில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதேபோல 2 ஆயிரத்து 242 கிராம சுகாதார நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆயிரத்து 21 டாக்டர்கள் தேர்வு செய்வதில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் முடிவுக்கு வரப்பட்டு தற்போது கொரோனா மதிப்பெண் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×