என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இலாகா இல்லாதவர் ஏன் அமைச்சராக இருக்கிறார்?- ஜெயக்குமார் கேள்வி
    X

    இலாகா இல்லாதவர் ஏன் அமைச்சராக இருக்கிறார்?- ஜெயக்குமார் கேள்வி

    • எங்கும், எதிலும் ஊழல் என்ற அடிப்படையில் ஊழல் சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருக்கிறது
    • எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம்.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு காலத்தில் மக்கள் விரோத போக்கு, ஜனநாயக விரோத போக்கு, சட்டத்தின் அத்துமீறல்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத தன்மை, மின்சார கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எங்கும், எதிலும் ஊழல் என்ற அடிப்படையில் ஊழல் சாம்ராஜ்யம் நடந்துகொண்டிருக்கிறது. எனவே இந்த ஆட்சி எப்போது தூக்கி எறியப்பட்டு மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்ற எண்ணம் மக்கள் மனதில் மேலோங்கி இருக்கிறது.

    தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையை பாராளுமன்ற தேர்தலுக்காக செப்டம்பர் மாதம் கொடுத்து, ஆசை காட்டி விட்டு அப்புறம் நிறுத்தி விடும் சூழல் நிச்சயம் ஏற்படும்.

    செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட வேண்டும். இலாகா இல்லாமல் எதற்கு அமைச்சர்?.

    அமலாக்கத்துறையினரிடம் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் மேலே இருந்து கீழே இருப்பவர்கள் வரை மாட்டக்கூடிய நிலைமை நிச்சயம் வரும்.

    மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னார். இன்றைக்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கிறது. இன்னும் பல அமைச்சர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள். தப்பு செய்தவர்கள் கம்பி எண்ணுகிற சூழ்நிலை நிச்சயம் உருவாகும்.

    எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நாங்கள் அஞ்ச மாட்டோம். நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சட்டமன்ற தேர்தல் என்றாலும், பாராளுமன்ற தேர்தல் என்றாலும் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். எத்தனை தொகுதிகள் என்பதை அ.தி.மு.க.தான் ஒதுக்கும். நாற்பதும் நமதே, நாடும் நமதே என்ற அடிப்படையில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

    தி.மு.க. அரசின் செயல்பாடுகள் எல்லாவற்றையும் கவர்னர் தொகுத்து வைத்திருக்கிறார்.

    மத்திய அரசும் உளவுப்பிரிவு மூலம் தகவலை திரட்டி வைத்துள்ளது. பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரக்கூடிய சூழ்நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×