search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - நயினார் நாகேந்திரன் விளக்கம்
    X

    கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - நயினார் நாகேந்திரன் விளக்கம்

    • தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
    • சென்னையில் ரூ.4 கோடி கடத்தி வந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடைபெற்றது

    தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.

    இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.

    3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    சென்னையில் ரூ.4 கோடி கடத்தி வந்தவர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நெல்லையில் சோதனை நடைபெற்றது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கணேஷ்மணி வீட்டில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி வீட்டில் ரூ.2 லட்சம் பணம், பரிசுப்பொருட்கள் சிக்கின.

    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்கள் சிக்கின.

    இந்நிலையில், இது தொடர்பாக பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் தொடர்பு இல்லை. யாராவது புகார் கொடுக்கட்டும். எனக்கு கவலை இல்லை. எனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை.

    என் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்று இப்படி சிலர் செய்கின்றனர். எனக்கு நெருக்கடி கொடுக்க சிலர் என்னை டார்கெட் செய்கின்றனர். மக்களை திசைதிருப்ப திமுகவினர் செய்த வேலை இது" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×