search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை இனி மத்திய அரசே நடத்தும் என்பதா? சீமான் கண்டனம்
    X

    மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை இனி மத்திய அரசே நடத்தும் என்பதா? சீமான் கண்டனம்

    • மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளது.
    • பாஜக அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இனி இந்திய ஒன்றிய அரசே எடுத்து நடத்தும் என்பது மாநில தன்னாட்சி மீது விழுந்துள்ள மற்றுமொரு பேரிடியாகும். மாநில அரசின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவிக்கும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

    இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (Directorate General of Health Services- DGHS) இதுவரை ஒன்றிய அரசின் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மாநில அரசுகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றிய அரசுக்கான ஒதுக்கீடு (15 விழுக்காடு) ஆகியவற்றில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் நடப்பாண்டு முதல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் மருத்துவச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மூலம் இனி இந்திய ஒன்றிய அரசே நடத்தும் என்பது அப்பட்டமான மாநில உரிமை பறிப்பு ஆகும்.

    இந்திய ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சியமைத்தது முதல் ஒற்றையாட்சியை நோக்கி நாட்டினை இட்டுச்செல்லும் வகையில் ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவித்து, கூட்டாட்சி தத்துவத்தைக் குழிதோண்டி புதைத்து, ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை, ஒரே குடும்ப அட்டை என்று அனைத்தையும் ஒற்றை மயமாக்கி வருகிறது. அதன் அடுத்தப்படியாக, தற்போது மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வைக்கூட விட்டுவைக்காது தன்வயப்படுத்த நினைப்பது தேசிய இனங்களின் இறையாண்மை மீது நடத்தப்படுகின்ற கொடுந்தாக்குதல் ஆகும்.

    இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் தாயகங்களான மாநிலங்களில் பல்வேறு கல்விக்கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வகையான இட ஒதுக்கீட்டு முறைகளும் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்பற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடும் நடைமுறையில் உள்ளது. ஆனால், மருத்துவ மாணவர் சேர்க்கையை இனி இந்திய ஒன்றிய அரசே நடத்தும்போது, நீட் தேர்வு போல இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறை என்று கூறி இவற்றையெல்லாம் ரத்து செய்யும் பேராபத்து ஏற்படக்கூடும்.

    அதுமட்டுமின்றி, மருத்துவக்கல்லூரிகள் அதிகமுள்ள தமிழ்நாட்டில் நீட் தேர்வில் வென்ற பிற மாநில மாணவர்கள் போலி இடச்சான்றிதழ் கொடுத்து சேரும் முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்திய ஒன்றிய அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை முழுமையாகக் கையகப்படுத்தும்பொழுது இத்தகைய முறைகேடுகள் மேலும் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி மாநில எல்லைகளைக் கடந்து, வடமாநில மாணவர்களை அதிக அளவில் தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் சேர்த்து தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்கவும் இம்முடிவு வழிவகுக்கும். 'நீட்' தேர்வு மூலம் தமிழ்நாட்டுக் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைத்தது போதாதென்று, தற்போது நீட் தேர்வில் வென்ற தமிழ் பிள்ளைகளின் மருத்துவ இடங்களையும் பறிக்கும் விதமாகவே தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையையும் இனி இந்திய ஒன்றிய அரசே நடத்த முடிவெடுத்துள்ளது. இது மருத்துவக் கல்வியில் மாநிலங்களுக்கு மிச்ச மீதமுள்ள அதிகாரத்தையும் அபகரிக்கும் எதேச்சதிகாரபோக்காகும்.

    அறுபது ஆண்டு காலமாக மாநில தன்னாட்சி குறித்து மேடைக்கு மேடை பேசிவரும் திமுக, தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு மாநில உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிபோய்க்கொண்டிருக்கின்றன. முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து, தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்வி உரிமை காக்கப்படும் என்று சொன்ன திமுக, இரண்டு ஆண்டுகளாகியும் இன்றுவரை அதனை நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் தற்போது இந்திய ஒன்றிய அரசால் திட்டமிட்டு பறிக்கப்படும் மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையையாவது பறிபோகாமல் பாதுகாக்க அரசியல் மற்றும் சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

    ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் முடிவினை உடனடியாகக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    Next Story
    ×