என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வாக்குகள் குறைந்தால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை: திமுக எச்சரிக்கை
- தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
- கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக்கட்சிகளின் பலம் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 3 குழுக்களை உருவாக்கி உள்ளார்.
அதன்படி தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வையிடும் குழுவில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனையில் ஈடுபட்டது.
கள நிலவரம், வாய்ப்புள்ள வேட்பாளர்கள், தொகுதியில் கூட்டணிக்கட்சிகளின் பலம் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
இதையடுத்து பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் குறைந்தால் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒருங்கிணைப்பு குழு தெரிவித்தது.
பொறுப்பு அமைச்சர்கள் தொடங்கி ஒன்றிய செயலாளர் வரை அனைவர் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் திமுக தலைவரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.






