search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ம.தி.மு.க., தி.மு.க. குறி வைப்பதால் திருச்சி, கரூர் தொகுதிகளை பெற காங்கிரஸ் பகீரத முயற்சி
    X

    ம.தி.மு.க., தி.மு.க. குறி வைப்பதால் திருச்சி, கரூர் தொகுதிகளை பெற காங்கிரஸ் பகீரத முயற்சி

    • ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே கருத்து வேறுபாடு முளைத்தது.
    • தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிக்கப்பட உள்ள நிலையில் கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி ஒதுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க. காங்கிரஸ் தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும், பா.ஜ.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது.

    கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கரூர் மற்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதில் திருச்சி தொகுதியில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும், கரூரில் ஜோதிமணியும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

    பின்னர் ஜோதிமணிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடையே கருத்து வேறுபாடு முளைத்தது. இதனால் கரூர் தொகுதியை மீண்டும் அவருக்கு ஒதுக்கக்கூடாது என உள்ளூர் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    அதேபோன்று திருச்சி பாராளுமன்ற தொகுதியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் போட்டியிடுவதில் திருநாவுக்கரசரும் ஜோதிமணியும் உறுதியாக உள்ளனர்.

    ஆகவே தி.மு.க. தலைமையுடன் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக திருநாவுக்கரசரிடம் கேட்டபோது, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பாண்டிச்சேரி உட்பட 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது எந்தெந்த தொகுதிகள் என பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை நிறைவடையும்போது எந்தெந்த தொகுதிகள் என்பது தெரிய வரும். ஆகவே நான் மேலும் இதில் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்றார்.

    Next Story
    ×