search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது- மு.க.ஸ்டாலின் விமர்சனம்
    X

    எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது- மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    • இன்றும், நாளையும் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது.
    • ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதே தவிர வேறு அல்ல.

    சென்னை:

    காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடி தலைமையில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து, ஏற்கனவே பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித்தலைவர் கூட்டத்தைக்கூட்டி அதில் சில முடிவுகளை எடுத்தோம்.

    அதைத்தொடர்ந்து, இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கக்கூடிய பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் 24 கட்சியினுடைய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பீகாரிலும், தொடர்ந்து கர்நாடக மாநிலத்திலும் பி.ஜே.பி.-யை வீழ்த்துவதற்காக தொடர்ந்து கூட்டப்படக்கூடிய கூட்டம் இது.

    பி.ஜே.பி. ஆட்சிக்கு மிகப் பெரிய எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இது. அமலாக்கத்துறை இன்றைக்கு அவர்களால் ஏவப்பட்டு, ஏற்கனவே வடமாநிலப் பகுதிகளில் அந்தப் பணிகளை செய்து கொண்டிருந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும், அந்தப் பணியை தொடங்கி இருக்கிறார்கள்.

    ஆகவே, அதைப்பற்றியெல்லாம் கிஞ்சுற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் கவலைப்படவில்லை. இன்றைக்கு, உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கக்கூடிய மாண்புமிகு பொன்முடி இல்லத்தில், அமலாக்கத்துறையின் மூலமாக சோதனை நடத்தப்படுகிறது என்று சொன்னால், இந்த வழக்கை பொறுத்தவரையில், அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, புனையப்பட்ட பொய் வழக்கு இந்த வழக்கு. ஏறக்குறைய 13 ஆண்டு காலத்திற்கு முன்பு போடப்பட்ட வழக்கு. தொடர்ந்து 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போதெல்லாம், இதைப்பற்றி எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.

    அண்மையில்கூட பொன்முடி மீது கடந்த கால ஆட்சியாளர்களால் சுமத்தப்பட்டிருந்த இரண்டு வழக்குகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆகவே, இந்த வழக்கைப் பொறுத்த வரையிலே சட்டரீதியாக அவர் இதனை நிச்சயமாக சந்திப்பார்.

    எது, எப்படி இருந்தாலும், வர இருக்கக்கூடிய பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரையில், இதற்கெல்லாம் நிச்சயமாக மக்கள் பதில் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால், பீகாரிலும், கர்நாடக மாநிலத்திலும் இதைத்தொடர்ந்து இன்னும் பல மாநிலங்களில் நடைபெற விருக்கக்கூடிய இந்த கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்புவதற்காக, செய்து கொண்டிருக்கக்கூடிய தந்திரம் தான் தவிர, வேறல்ல. இதை எல்லாம் நிச்சயமாக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய நாங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்கிறோம்.

    கேள்வி: உங்களுக்கு கொடுக்கக்கூடிய நெருக்கடியாக பார்க்கிறீர்களா?

    பதில்: ஏற்கனவே தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் ஆளுநர் தேர்தல் பிரச்சாரத்தை எங்களுக்காக நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது அமலாக்கத்துறையும் சேர்ந்திருக்கிறது. ஆகவே, தேர்தல் வேலை எங்களுக்கு சுலபமாக இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன்.

    கே: கடந்த முறை நீங்கள் பீகார் சென்ற போது அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்தது, பிறகு இரண்டாவது முறை யாக பெங்களூர் செல்லும் போது அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறது, இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: இது எல்லாம் சகஜம், சர்வ சாதாரணம். மக்களை திசை திருப்புவதற்காக செய்யக்கூடிய நாடகம். இதை எல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கே தெரியாதா. நீங்களே உங்கள் மனசாட்சியை கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே இது நியாயமா, இதை எதற்காக செய்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

    கே: பெங்களூருக்கு செல்கிறீர்கள், காவேரி விவகாரம் பற்றி பேசுவீர்களா?

    ப: காவேரி பிரச்சனை பொறுத்தவரையிலே, மேகதாது பிரச்சனை பொறுத்தவரையிலே என்றைக்கு கலைஞர் அதிலே ஒரு முடிவெடுத்து அந்தப் பணியை நிறைவேற்றி கொண்டிருந்தாரோ, அந்தப் பணியில் கிஞ்சிற்றும் மாறாமல் அதை கடைப்பிடிப்போம்.

    இந்தக் கூட்டம் என்பது, ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காக நடைபெறவுள்ள கூட்டம். காவேரி பிரச்சனை பற்றிய கூட்டம் அல்ல.

    இன்னும் சொல்லப் போனால், இப்போது இந்தியாவிற்கே ஆபத்து வந்திருக்கிறது, அந்த ஆபத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுவதற்காகத் தான் இந்தக் கூட்டம் நடைபெறுகிறதே தவிர வேறு அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×