search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை- மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவை- மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    • அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 40 லட்சம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நம் அதிகாரிகள், மாநில பேரிடர் மீட்டு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களை திரட்டியுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால், இணைப்பு சாலைகள் இருப்பதால், இந்த பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும்.

    தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன. பேரழிவின் தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் மூழ்கப்பட்டிருப்பதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவை.

    எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக நிலைநிறுத்த உங்கள் அவசரத் தலையீட்டைக் கோருகிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×