search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    21 தொகுதிகளில் களம் காணும் தி.மு.க. வேட்பாளர்களின் பின்னணி
    X

    21 தொகுதிகளில் களம் காணும் தி.மு.க. வேட்பாளர்களின் பின்னணி

    • காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள க.செல்வம், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
    • பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ப.ராஜ்குமார் எம்.ஏ. மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக எஞ்சியுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

    தி.மு.க. போட்டியிடும் 21 வேட்பாளர்களில் 10 பேர் ஏற்கனவே களம் கண்ட அனுபவசாலிகள். 11 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 21 பேரில் 3 பெண்கள், 19 பட்டதாரிகள், 3 முதுநிலை பட்டதாரிகள், 2 டாக்டர்கள், 6 வக்கீல்கள், முனைவர் பட்டம் பெற்ற 2 பேரும் அடங்கியுள்ளனர்.

    தி.மு.க. வேட்பாளர்களின் கல்வி மற்றும் இதர பின்னணி பற்றிய விவரம் வருமாறு:-

    1. வடசென்னை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் கலாநிதி வீராசாமிக்கு வயது 54. பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரான இவர், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன். நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். இந்த தொகுதியில் கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் இதே தொகுதியில் 2-வது முறையாக களம் காண்கிறார்.

    2. தென் சென்னை வேட்பாளரான சுமதி என்கிற தமிழச்சி தங்கபாண்டியன் (61), கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பாடல் ஆசிரியர் என பன்முகத்தன்மைக்கு சொந்தக்காரர். எம்.ஏ., எம்.பில் படித்துள்ளார். முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருடைய தந்தை தங்கபாண்டியன் முன்னாள் அமைச்சர் என்பதும், தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இவரது சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர், முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 2-வது முறையாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    3. மத்திய சென்னையில் களம் இறங்கும் தயாநிதி மாறன் (57), பி.ஏ. படித்துள்ளார். முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் மகன். இவரும் மத்திய மந்திரியாக இருந்துள்ளார். இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் இதே தொகுதியில் 2004 பாராளுமன்ற தேர்தல் முதல் தொடர்ந்து 6-வது முறையாக போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டும் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    4. ஸ்ரீபெரும்புதூரில் களம் காணும் டி.ஆர்.பாலு (83), பி.எஸ்சி. படித்துள்ளார். வர்த்தக நிறுவனம் நடத்தி வருகிறார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், 1986-ம் ஆண்டு பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக இருந்தார். 1996 பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மத்திய இணை மந்திரி ஆனார்.

    தொடர்ந்து 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மத்திய மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் உள்ளவர். 2009 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2019 தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது 3-வது முறையாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    5. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள க.செல்வம் (50), விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். எம்.காம். எம்.பில் மற்றும் வக்கீலுக்கு படித்துள்ளார். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தற்போது இவருக்கு 2-வது முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    6. அரக்கோணம் தொகுதியில் களம் இறங்கும் எஸ்.ஜெகத்ரட்சகன் (76), எம்.ஏ. படித்துள்ளார். என்ஜினீயரிங் கல்லூரிகள், ஆஸ்பத்திரிகள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் (1999, 2009 மற்றும் 2019) 3 முறை வெற்றி பெற்றுள்ளார். மத்திய இணை மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். 2014 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது 4-வது முறையாக அரக்கோணம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    7. வேலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கதிர் ஆனந்த் (49), பி.காம்., எம்.பி.ஏ. படித்துள்ளார். கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். அமைச்சர் துரைமுருகனின் மகன். கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் முதல் முறையாக களம் இறங்கி, வெற்றி வாகை சூடிய அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    8. தர்மபுரி வேட்பாளரான ஆ.மணி (55), வக்கீல் ஆவார். வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2019-ம் ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவருக்கு தற்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    9. திருவண்ணாமலையில் களம் காணும் சி.என். அண்ணாதுரை (51), விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். பி.காம் பட்டதாரியான இவர், முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த 2014-ம் சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார். தற்போது அதே தொகுதியில் இவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

    10. ஆரணி தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.தரணிவேந்தன் (58), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். விவசாய தொழில் செய்கிறார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், தேர்தல் களத்தை சந்திப்பது முதல் முறை ஆகும்.

    11. கள்ளக்குறிச்சி வேட்பாளரான தே.மலையரசன் (49) பி.காம் படித்துள்ளார். வணிகம் செய்கிறார். உடையார் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார்.

    12. சேலம் தொகுதியில் களம் இறங்கும் டி.எம்.செல்வ கணபதி (65), எம்.ஏ. மற்றும் வக்கீலுக்கு படித்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். 1999-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, சேலம் தொகுதி எம்.பி.ஆனார். 2008-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். 2010-ம் ஆண்டு பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக இருந்தார். வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவர், இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார்.

    13. ஈரோடு தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கே.இ.பிரகாஷ் (48) பி.ஏ. பொருளாதாரம் படித்தவர். 'டைல்ஸ்' விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார். தி.மு.க.வில் இளைஞரணி மாநில துணை செயலாளராக உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞரணிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    14. நீலகிரி (தனி) தொகுதியில் களம் இறங்கும் ஆ.ராசா (60) பி.எஸ்.சி., பி.எல். படித்துள்ளார். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த இவர், பெரம்பலூர் தொகுதியில் 1999 மற்றும் 2004-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நீலகிரி தொகுதியில் 2009, 2014, 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதில் 2014 தேர்தலில் தோல்வி அடைந்தார். 2 முறை மத்திய மந்திரியாக இருந்தவர். தற்போது 4-வது முறையாக நீலகிரி தொகுதியில் களம் காண்கிறார்.

    15. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கோவை தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ப.ராஜ்குமார் (59) எம்.ஏ. மற்றும் முனைவர் பட்டமும் பெற்றவர். விவசாய தொழில் செய்கிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். கோவை மாநகராட்சி மேயராக (அ.தி.மு.க.) 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தவர். கடந்த 2020-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் களத்தை முதல் முறையாக சந்திக்கிறார். இவர் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

    16. பொள்ளாச்சி தொகுதி வேட்பாளரான கே.ஈஸ்வரசாமி (47), 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். நூற்பாலை நடத்தி வருகிறார். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்த இவர், முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.

    17. பெரம்பலூர் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ள கே.என்.அருண் நேரு (40), ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். அரிசி ஆலை நடத்தி வருகிறார். ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர். அமைச்சர் கே.என்.நேருவின் மகன் ஆவார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்டது. அப்போது வழங்கப்படாத வாய்ப்பு இப்போது வழங்கப்பட்டுள்ளது. இவரும் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.

    18. தஞ்சை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முரசொலி (45), வக்கீல் ஆவார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், தஞ்சை தொகுதியில் 6 முறை வெற்றி வாகை சூடிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு பதிலாக களம் இறக்கப்பட்டுள்ளார்.

    19. தேனி தொகுதியில் களம் காணும் தங்க தமிழ்ச்செல்வன் (62), எம்.ஏ. படித்தவர். விவசாய தொழில் செய்கிறார். முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த இவர், அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளில் இருந்தவர். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்காக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவரை பாராளுமன்ற மேல் சபை எம்.பி.யாக்கினார் ஜெயலலிதா. 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். 2021 சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். தற்போது அவருக்கு தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    20. நட்சத்திர அந்தஸ்து பெற்ற தூத்துக்குடி தொகுதியில் களம் இறங்கும் கனிமொழி (56), மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மகள் ஆவார். எம்.ஏ. படித்துள்ளார். தி.மு.க. துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்கிறார். கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்டவர். பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாக இருந்த அவர், கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக களமிறங்கி மாபெரும் வெற்றி பெற்றார். தற்போது தூத்துக்குடி தொகுதியில் 2-வது முறையாக களம் காண்கிறார்.

    21. தென்காசி (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் ராணிஸ்ரீகுமார் (40), சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் நிபுணராக பணியாற்றியவர். ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் புதுமுக வேட்பாளர் ஆவார்.

    Next Story
    ×