என் மலர்
செய்திகள்

சுருக்குமடி வலை தடையை நீக்ககோரி தேவனாம்பட்டினம் மீனவர்கள் தர்ணா போராட்டம்
கடலூர்:
தமிழகத்தில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது. என கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி அறிவுறுத்தி வருகிறார்.
சுருக்கு மடி வலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் உட்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் தேவனாம்பட்டினம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
எனவே கடலூர் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் யாரும் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இருப்பினும் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் மீனவர்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதைத்தொடர்ந்து தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த் தை நடத்தினர். அப்போது மீனவர்கள் கூறியதாவது:-
சுருக்குமடி வலைக்கு அரசு தடை விதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்காவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இது வரை அரசியல் கட்சியினர் யாரும் அந்த பகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






