search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்தோஷ் குமார்
    X
    சந்தோஷ் குமார்

    சிதம்பரம் அருகே மின்கம்பத்தில் கட்டி வைத்து வாலிபர் கொடூர கொலை

    சிதம்பரம் அருகே மின்கம்பத்தில் கட்டி, வைத்து வாலிபர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 10 திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்குதில்லைநாயகபுரம் அழிஞ்சிமேடு சுடுகாடு அருகே உள்ள மின்கம்பத்தில் கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி சிதம்பரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடை மணல் கிராமத்தை சேர்ந்த சேகர் மகன் சந்தோஷ்குமார்(வயது 27) என்பதும், அவரை மர்மநபர்கள் கொடூரமாக அடித்து கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட சந்தோஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் வேலைக்காக மீண்டும் சென்னை செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் வடக்குதில்லைநாயகபுரம் அழிஞ்சிமேடு சுடுகாடு அருகே கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

    இதையடுத்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் கிடந்த தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்த மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சந்தோஷ்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தார். மேலும் இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த 10 திருநங்கைகளை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×