என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டுவதை படத்தில் காணலாம்
    X
    குற்றாலம் மெயினருவியில் ஆர்ச் மீது தண்ணீர் கொட்டுவதை படத்தில் காணலாம்

    பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு - குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிப்பு

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் குளிக்க தடை நீடிக்கப்பட்டுள்ளது.
    தென்காசி:

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள அணை அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தென்காசி மாவட்டத்தில் உள்ள அடவிநயினார், ராமநதி, கருப்பாநதி, கடனாநதி, குண்டாறு ஆகிய 5 அணைகளும் நிரம்பி விட்டன.

    குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டிவருகிறது. இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் அதிகளவில் கொட்டி வருகிறது.

    மேலும் அவ்வப்போது வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தண்ணீர் வரத்திற்கு தகுந்தாற்போல் தடையும் விதிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை கொட்டியதால் நேற்று காலை மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மெயினருவியில் ஆர்ச் தெரியாத அளவிற்கு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுந்தது.பழையகுற்றால அருவியில் மிகவும் அதிகமாக தண்ணீர் கொட்டியதால் அருவிக்கு செல்லக்கூடிய வழியில் இருக்கும் படிக்கட்டுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

    கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி கண்காணித்தனர்.

    இந்த நிலையில் குற்றால அருவிகளில் இன்றும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. வெள்ளம் குறையாததால் அனைத்து அருவிகளிலும் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.
    Next Story
    ×