என் மலர்
செய்திகள்

அரியலூர் அருகே விபத்து - 4 வாலிபர்கள் பலி
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது 24), அஜித் (19), ஹீரன் (22), விக்னேஷ் (22. இவர்கள் 4 பேரும் நேற்றிரவு ஒரே மோட்டார் சைக்கிள்களில் கீழப்பழுவூர் சென்று விட்டு மீண்டும் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
திருச்சி-சிதம்பரம் சாலையில் மயிலாண்டகொட்டாய் பகுதியில் செல்லும் போது முன்னாள் தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயன்றனர். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் மதியழகன் (34), மணிகண்டன் (27) ஆகியோர் வந்தனர்.
இதனால் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மதியழகன், மணிகண்டன் சாலையோரத்தில் மணலில் விழுந்தனர். சதீஷ், அஜீத், ஹீரன், விக்னேஷ் ஆகிய 4 பேரும் நடுரோட்டில் விழுந்தனர். அந்த சமயம் பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி 4 பேர் மீதும் ஏறி இறங்கியது.
இதில் ஹீரன் தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மதியழகன், மணிகண்டன், ஹீரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஹீரன் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டி.எஸ்.பி. இளஞ்செழியன், அரியலூர் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த வாலிபர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை உடனே கைது செய்யக்கோரி திருச்சி- சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய லாரி டிரைவர் அரியலூர் கீழநத்தம் பகுதியை சேர்ந்த ரகுபதியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






