என் மலர்
செய்திகள்

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நீடிக்கும் மத்தியில் மீண்டும் மோடி ஆட்சி அமையும் - தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வடமாநிலங்களில் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்துக்காக செல்கிறேன். நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும்.
மத்தியில் தாமரை மலரும். மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அது பலிக்காது.
பத்திரிகை சுதந்திரம் இல்லை என்று சொல்வது தவறு. காங்கிரஸ் ஆட்சியில் நெருக்கடி நிலையை கொண்டு வந்தனர். அப்போது பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக சொல்வதை ஏற்க முடியாது. மாநில உரிமைகாக்கப்படுவது போல தேசிய ஒற்றுமையும் அவசியம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் கிடைக்கும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வை சந்திக்க அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது தான் இதற்கு காரணம். தமிழில் நீட் தேர்வு எழுதுபவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் நீட் தேர்வு எழுதும் சிலருக்கு தான் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் உள்ளது. அதுவும் அவர்களுடைய விருப்பப்படியே தேர்வு மையத்தை தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.
கஜா புயலின் போது பிரதமர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை என்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் புயல் தாக்கிய போது மன்மோகன்சிங் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தார்?
இந்திய பொருளாதாரம் சரிந்துவிட்டதாக சிலர் தவறான தகவலை கூறுவது தவறு. பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி மூலம் தமிழ் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan






