search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் நாளை ராகுல் காந்தி - மு.க. ஸ்டாலின் கூட்டாக தேர்தல் பிரசாரம்
    X

    நாகர்கோவிலில் நாளை ராகுல் காந்தி - மு.க. ஸ்டாலின் கூட்டாக தேர்தல் பிரசாரம்

    நாகர்கோவிலில் நாளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். #RahulGandhi #MKStalin
    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடக்கிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு நாள் குறித்து விட்டது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி இந்தியாவின் தென்கோடி முனையான நாகர்கோவில் நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறது.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    நாகர்கோவில் நகரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி நாளை காலை சென்னை வருகிறார். அங்கு ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த கூட்டம் முடிந்ததும், விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் புறப்படுகிறார்.

    நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கல்லூரி மைதானத்தில் ராகுல்காந்தியின் ஹெலிகாப்டர் வந்திறங்க தளம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை பகல் 2 மணிக்கு வந்து சேரும் ராகுல்காந்தி அங்கிருந்து நேராக விழா மேடைக்கு செல்கிறார்.

    தொடர்ந்து கட்சியின் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், கட்சியின் அகில இந்திய மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    காங்கிரஸ் நடத்தும் இந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டனர்.

    இதனால் நாகர்கோவிலில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரசுடன் அணி சேர்ந்துள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். கூட்டணிக்கு தலைமை ஏற்கும் தி.மு.க.வின் தலைவர் மு.க. ஸ்டாலினும், கூட்டத்தில் ராகுலுடன் பங்கேற்று பிரசாரம் செய்கிறார்.



    இதுபோல ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்கள்.

    நாகர்கோவிலில் ராகுல்காந்தி பங்கேற்கும் கூட்டமே தமிழகத்தில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியின் முதல் பிரசார கூட்டமாக அமைகிறது. இதனால் கூட்டணி கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    அவரவர் கட்சி தலைவர்களை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனால் நாகர்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்காட் கல்லூரி மைதானத்தை சுற்றிலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

    கூட்டணி தலைவர்கள் அமரும் மேடை வித்தியாசமாக திறந்தவெளி மேடையாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேடையில் அமரும் தலைவர்களை தொண்டர்கள் மேடையின் 3 புறத்தில் இருந்தும் பார்க்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கூட்ட ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

    கூட்டத்திற்கு வரும் தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் அமர தனித்தனி இட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உயர் பாதுகாப்பு பிரிவில் இருப்பதால் அவருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஸ்காட் கல்லூரி மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    நேற்று முதல் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். 2 ஆயிரம் போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #RahulGandhi #MKStalin
     
    Next Story
    ×