search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயம் அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை
    X

    காங்கயம் அருகே கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை

    காங்கயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களை காப்பாற்ற சென்ற பேரன் படுகாயம் அடைந்தான்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளியங்காட்டு புதூரை சேர்ந்தவர் தங்க முத்து (60). இவரது மனைவி நாகமணி (55). தங்க முத்து கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

    இந்த தம்பதிக்கு சந்திரசேகரன் என்ற மகன் இருந்தார். இவருக்கு திருமணமாகி தருண் (10) என்ற மகன் உள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக சந்திரசேகரன் மனைவியை பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் அவர் தனது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்துக்கு முன் சந்திரசேகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

    இதனால் தங்கமுத்துவும், அவரது மனைவி நாகமணியும் வேதனையில் இருந்தனர். தங்களது பேரன் தருணை அவர்கள் கவனித்து வந்தனர். ஆனாலும் முதுமை காரணமாக அவர்களுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால் வேதனையில் இருந்தனர். மகன் இறந்த துக்கமும் அவர்களை வாட்டியது.

    இன்று அதிகாலை 5.30 மணியளவில் தங்கமுத்துவும், அவரது மனைவி நாகமணியும் தங்களது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தனர். தீ உடலில் பற்றி எரிந்தவுடன் சத்தம் போட்டனர்.

    இதனை கேட்டதும் அங்கு படுத்து தூங்கி கொண்டு இருந்த தருண் ஓடி வந்தான். அவன் தனது தாத்தா-பாட்டி மீது பற்றிய தீயை அணைக்க முயன்றான்.

    அவனை இருவரும் தள்ளி விட்டனர். இதனால் தருண் சிறு தீக்காயத்துடன் தப்பினான். அவன் வெளியே வந்து சத்தம் போட்டான்.

    இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் தங்கமுத்து- நாகமணி மீது பற்றிய தீயை அணைத்தனர். ஆனாலும் இருவரும் தீயில் கருகி பலியாகி விட்டனர்.

    இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட கணவன்-மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×