search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும்- தினகரன் சொல்கிறார்
    X

    அதிமுகவுடன் கூட்டு சேரும் கட்சிகள் டெபாசிட் இழக்கும்- தினகரன் சொல்கிறார்

    அ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #parliamentelection

    ரிஷிவந்தியம்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் மேற்கொண்டு வந்தார்.

    கடந்த 6-ந்தேதி தொடங்கிய இவரது புரட்சி பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று மாலை தியாகதுருகம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, மேல்நாரியப்பனூர், வடக்குநந்தல், ஆலத்தூர், சங்கராபுரம், பாவலம் ஆகிய இடங்களில் பேசினார். பகண்டை கூட்ரோடு பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு திறந்தவேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார்.


    இன்றைய முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆட்சி செய்வதற்கு காரணமாக இருந்த நமது கழக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், எனக்கும் துரோகம் செய்த காரணத்தால் பிரபு எம்.எல்.ஏ. போன்று தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் தொகுதி மக்களின் தேவைகளை சரிவர செய்யவில்லை.

    பட்ஜெட்டில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளார்கள். ஆனால், ரிஷிவந்தியம் தொகுதியை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு புறக்கணித்துள்ளனர். மழை இல்லாத காரணத்தால் விவசாயிகள் அண்டை மாநிலங்களுக்கு பிழைப்பு தேடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் படித்த மாணவ-மாணவிகள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். அரசு சார்ந்த கரும்பு ஆலைகளும், தனியார் கரும்பு ஆலைகளும், விவசாயிகளின் கரும்பு நிலுவைத் தொகையை வழங்காததால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

    மேட்டூர் அணை நிரம்பி கடலுக்கு செல்லும் நீரை முறையாக சேமித்து விவசாயத்துக்கு பயன்படுத்த இந்த ஆட்சியாளர்கள் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

    அவர்கள் எல்லோரும் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. காதில் பூ சுற்றுவதுபோல் பட்ஜெட்டில் பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.

    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் செய்தால் அவர்களை அடக்குகிறார்கள். ஆனால் இவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்காமலேயே அவர்களது சம்பளத்தை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி உள்ளனர்.

    தற்போது தமிழகத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடி உள்ளது. இதையெல்லாம் சரி செய்யாமல் டாஸ்மாக்கில் இருந்து வருகிற வருமானத்தால் ஆட்சியை ஓட்டிவிடலாம் என்று பகல் கனவு காணுகின்றனர்.

    ஜெயலலிதா 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மதுக்கடையை குறைக்காமல் வருமானத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு நமக்கு சாதகமாக வரும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த தீர்ப்பு நமக்கு சாதகமாக வரவில்லை. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர்.

    சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால் ஆளுங்கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து விடும்.

    அ.தி.மு.க.வினர் எந்த கூட்டணி அமைத்தாலும் ஒரு தொகுதியில் கூட அவர்களுக்கு டெபாசிட் கிடைக்காது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரிஷிவந்தியம் தொகுதியில் ஐ.டி.ஐ. தொழிற்சாலை கொண்டு வருவோம். 24 மணி நேரமும் செயல்படும் கூடுதல் ஆஸ்பத்திரி அமைக்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு பஸ் போக்குவரத்து செய்து கொடுப்போம். பகண்டை கூட்ரோட்டில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். அனைத்து ஏரிகளையும் தூர்வாரி, நீர்நிலைகளில் நீரை சேமிக்க வழிவகை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #admk #parliamentelection

    Next Story
    ×