search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
    X

    ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #ministerkadamburraju #sterliteplant

    கயத்தாறு:

    தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முதற்கட்டமாக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    வருகிற சட்டசபை கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும். சின்னத்திரை மற்றும் திரைப்படத்துறையினரை ஊக்குவிக்கும் வகையில் மானியம், விருதுகள் போன்றவை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாரான 149 படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10 கோடியே 43 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மீது மிகுந்த மதிப்பு மரியாதை உள்ளது. அவர் பொதுவாக அமைச்சர்களை குறை கூறுவது அழகல்ல. எந்த அமைச்சர் மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டாலும், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு, நிரூபிக்கப்படாத வரையிலும் குற்றவாளி என்று கூற கூடாது.

    விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணரெட்டி 20 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இல்லாதபோது நடந்த சம்பவம் தொடர்பாக நீதி மன்றம் விசாரணை நடத்தி, அவருக்கு தண்டனை விதித்தது. நீதிக்கு தலைவணங்கி உடனே அவர் பதவியை ராஜினாமா செய்து முன்னு தாரணமாக விளங்கினார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வலுவான ஆதாரங்களுடன் வக்கீல்கள் வாதம் புரிகின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிறைவேற்றவில்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசு உறுதியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×