search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிறுவனை கொன்ற வாலிபர் கொலை- சென்னை பெண்ணுக்கு பொம்மை துப்பாக்கி கொடுத்து ஏமாற்றிய கும்பல்

    திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சென்னை பெண்ணுக்கு பொம்மை துப்பாக்கி கொடுத்து கும்பல் ஏமாற்றியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது28). இவர் சென்னையில் வேலை செய்யும்போது நெசப்பாக்கத்தை சேர்ந்த மஞ்சுளாவுடன் (வயது 37) கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த வி‌ஷயம் கணவருக்கு தெரியவரவே கள்ளக்காதலனுடனான தொடர்பை மஞ்சுளா நிறுத்திக்கொண்டார்.

    இதற்கு மஞ்சுளாவின் மகன் ரித்தேஷ் (10) காரணம் என நினைத்து அவனை நாகராஜ் கடத்திக் கொலை செய்தார். இந்த சம்பவத்தில் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

    ஜாமீனில் வெளியேவந்த அவர் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதியன்று மாலை 5 பேர் கொண்ட கும்பல் நாகராஜை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.

    இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக நாகராஜின் கள்ளக்காதலி மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். தொடர்ந்து போலீசார் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவி (19) என்பவரையும் கைது செய்தனர்.

    சென்னை கோர்ட்டில் சரண் அடைந்த மஞ்சுளா உள்பட 5 பேரும் கடந்த 7-ந் தேதி மாலையில் திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை திருவண்ணாமலை டவுன் போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    மஞ்சுளா உள்பட 5 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது.

    மஞ்சுளா தனது மகன் ரித்தேஷ் கொலைக்கு பழிவாங்குவதற்காக நாகராஜை கொலை செய்ய முடிவு செய்தார். முதலில் இதற்காக ஒரு கும்பலிடம் கள்ளத்துப்பாக்கி ஒன்றை வாங்கி உள்ளார்.

    ஆனால் அவர்கள் மஞ்சுளாவிற்கு பொம்மை துப்பாக்கியை கொடுத்து ஏமாற்றி உள்ளனர். கள்ளத்துப்பாக்கி வாங்கிய விவகாரத்தில் மஞ்சுளா சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தார்.

    தொடர்ந்து அவர் நாகராஜை கொலை செய்ய வேண்டும் என்ற ஆத்திரத்திலும், மகன் ரித்தேஷ் இறந்த துக்கத்திலும் காணப்பட்டார்.

    அப்போது அவர் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் வீட்டிற்கு வெள்ளையடிப்பதற்காக சரவணன் வந்து உள்ளார்.

    சோகத்துடன் காணப்பட்ட மஞ்சுளாவிடம் அவர் பேச்சுக் கொடுத்து உள்ளார். நடந்த சம்பவத்தை மஞ்சுளா சரவணனிடம் கூறியுள்ளார். பின்னர் அவர் மஞ்சுளாவிற்கு ஆறுதல் தெரிவித்து பேசி வந்து உள்ளார்.

    சரவணனிடம் "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், நாகராஜை கொலை செய்ய வேண்டும்" என்று மஞ்சுளா கூறியுள்ளார். அதனை கேட்ட சரவணன் தனது நண்பர்கள் மூலம் நாகராஜை கொலை செய்வதாக மஞ்சுளாவிடம் வாக்குறுதி அளித்து உள்ளார். இதற்காக அவர் மஞ்சுளாவிடம் அடிக்கடி பணம் வாங்கி உள்ளார்.

    பின்னர் சரவணன் தனது நண்பர்கள் தினேஷ்குமார், ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சஞ்சீவி ஆகியோருடன் கடந்த 29-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வந்து நாகராஜை வெட்டி கொலை செய்துள்ளார்.

    மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போலீஸ் காவல் முடிந்து மஞ்சுளா சென்னை ஜெயிலிலும் மற்ற 4 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×