search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் வாலிபர் கொலை- கூலிப்படையை சேர்ந்த சென்னை வாலிபர் கைது
    X

    திருவண்ணாமலையில் வாலிபர் கொலை- கூலிப்படையை சேர்ந்த சென்னை வாலிபர் கைது

    திருவண்ணாமலையில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    மஞ்சுளாவின் 10 வயது மகன் ரித்தேஷ் என்பவரை நாகராஜ், கடந்த மார்ச் மாதம் கடத்தி கொலை செய்தார். இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து, நாகராஜ் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ந்தேதி மாலை கடைக்கு அருகே மர்ம கும்பலால் நாகராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கூலிப்படை உதவியுடன் கள்ளக்காதலன் நாகராஜை மஞ்சுளா கொலை செய்தது தெரிய வந்தது.

    இந்நிலையில், நாகராஜ் கொலையில் தேடப்பட்டு வந்த மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ் குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் உள்ளிட்ட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் 7-வது நீதிமன்ற நீதிபதி பஷீர் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். 5 பேரையும் 4-ந்தேதி வரை சிறையில் அடைக்கவும், அன்றைய தினம் திருவண்ணாமலை கோர்ட்டில் 5 பேரையும் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    திருவண்ணாமலை டவுன் போலீசார் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். நேற்று சென்னை சென்ற தனிப்படை போலீசார் அரும்பாக்கத்தை சேர்ந்த சஞ்சீவி (19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×