search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்தில் பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி- செல்லூர் ராஜூ கடும் தாக்கு
    X

    செந்தில் பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி- செல்லூர் ராஜூ கடும் தாக்கு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார். #ministersellurraju #SenthilBalaji

    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 91-வது வார்டான ஜெய்ஹிந்துபுரத்தில் ஆழ்துளை கிணறு, புதிய சாலை உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் நடராஜன், மாநகராட்சி கமி‌ஷனர் அனீஷ்சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழா முடிந்ததும் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கவுன்சிலராக இருக்கும் போது அ.தி.மு.க.விற்கு வந்தார். அம்மா இல்லாத நேரத்தில் அ.தி.மு.க.வை காக்க வேண்டிய அவர் இந்த நேரத்தில் நிறம் மாறி தி.மு.க.வுக்கு சென்று விட்டார்.

    செந்தில்பாலாஜி அடிக்கடி நிறம் மாறும் பச்சோந்தி. அவர் அ.தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்திற்கு வந்தார், போனார் என்ற அடிப்படையில் தான் பார்க்கிறோம். அவர் ஒன்றும் தியாகி கிடையாது. அவரை பொறுத்தவரை ஒரு சுயநலவாதி.

    அம்மா தனது ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக அவரை அமர்த்தி அழகுபார்த்தவர். தி.மு.க. ஊழல் இல்லாத கட்சி என்று மு.க.ஸ்டாலின் பறை சாற்றி வருகிறார். ஆனால் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்பவர் செந்தில்பாலாஜி. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. எப்படி அவரை ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்?

    ஒரு ஊழல் கட்சி, ஊழல்வாதியை ஏற்றுக்கொள்வது சர்வ சாதாரணம் தான்.

    இது போன்று தான் செல்வகணபதி, ரகுபதி போன்றவர்கள் எங்களிடம் இருக்கும்போது நல்லவர்களாக இருந்தார்கள். தி.மு.க.வில் சேர்ந்தபின்னர் ஊழல்வாதிகளாக மாறி விட்டனர்.

    நாங்கள் அம்மா வழியில் சிறப்பாக செயலாற்றி வருகிறோம். தினகரன் அணியை பொருட்படுத்த மாட்டோம். அம்மாவின் கொள்கையை ஏற்றுள்ள எந்த தொண்டனும் தி.மு.க.வுக்கு போக மாட்டார்கள். தி.மு.க.வில் சேருவது என்பது தற்கொலைக்கு சமமானது.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயல் நிவாரணப்பணியில் அமைச்சர்களை ஈடுபடுத்தி மக்களுக்கு தேவையானதை செய்தார். மத்திய அரசை எதிர்பார்க்காமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மத்திய அரசுக்கு கடிதம் மற்றும் மத்தியக்குழுவின் மூலம் முதல்-அமைச்சர் வலியுறுத்தி நிவாரண நிதியை பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    பிரதமர் சேதமடைந்த பகுதியை பார்ப்பது என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் சேதத்திற்குரிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நலத்திட்டங்களை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, முன்னாள் மேயர் திரவியம், எம்.எஸ்.பாண்டியன், பரவை ராஜா, சோலைராஜா, பைக்காரா கருப்புசாமி, பிரிட்டோ, கலைச்செல்வம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×