என் மலர்
செய்திகள்
பெரம்பலூரில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று நாடகமாடிய தாய் கைது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 30). இந்த தம்பதிக்கு ரஞ்சிதா (6) என்ற மகளும், பிரினித்தா என்ற 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பிச்சைபிள்ளை துபாயில் கூலி வேலைசெய்து வருகிறார். ரஞ்சிதா தேவையூர் பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று பிரினித்தாவுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக கோவிந்தம்மாள், குழந்தையை தூக்கிக்கொண்டு பெரம்பலூருக்கு புறப்பட்டார். பெரம்பலூர் சென்ற ஒரு அரசு பஸ்சில் கோவிந்தம்மாள் குழந்தையுடன் பயணம் செய்தார். பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்தபோது, பஸ்சில் இருந்து கோவிந்தம்மாள் சுயநினைவின்றி கீழே இறக்கி விடப்பட்டார்.
பின்னர் அவர் தன்னை அறியாமல் நடந்து சென்றார். இதனை கண்ட அவருக்கு தெரிந்த நபர்கள் கோவிந்தம்மாளை நிறுத்தி, அவர் முகத்தில் தண்ணீரை தெளித்தனர். இதனால் சுயநினைவுக்கு வந்த அவர், பிரினித்தாவையும், வெள்ளி நகைகள் வாங்க வைத்திருந்த ரூ.5 ஆயிரம் இருந்த மணி பர்சு, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றையும் திருடு போனதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து புகார் அளிக்க சென்ற கோவிந்தம்மாளிடம் போலீசார் புகாரினை பெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த அவரது உறவினர்கள் நேற்று இரவு பெரம்பலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிந்தம்மாளிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் பஸ்சில் தனது அருகே அமர்ந்து பயணித்த பெண், தன் மீது மயக்க மருந்து தெளித்ததாகவும், பின்னர் தான் சுயநினைவை இழந்ததும் பணம், செல்போனை திருடிக் கொண்டு, எனது குழந்தையையும் கடத்திச்சென்று விட்டார் என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதற்கிடையே ஓடும் பஸ்சில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது கோவிந்தம்மாளின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரிடம் இருந்தே விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.
இதனால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அப்போது குழந்தை பிரினித்தாவை கொலை செய்து கிணற்றில் வீசியதாக கூறியுள்ளார். இதனால் அங்கு நின்ற அவரது உறவினர்கள் உட்பட அனைவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பின்னர் இது குறித்து கோவிந்தம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
தனது கணவர் பிச்சைபிள்ளை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனால் தன்னையும், குடும்பத்தையும் கவனிக்காமல் விட்டுவிட்டார். இதனால் இரு குழந்தைகளையும் வளர்க்க சிரமமாக இருந்தது.
இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். அப்போது தனது மூத்த மகள் ரஞ்சிதாவை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு, கைக் குழந்தையை மட்டும் எடுத்துக் கொண்டு பெரம்பலூர் அருகே உள்ள வாடிகண்டபுரம் பகுதிக்கு சென்றேன். அங்குள்ள ஒரு கிணத்தில் குழந்தையை வீச முடிவு செய்தேன். ஆள் நடமாட்டம் இல்லாததை பார்த்து குழந்தையை தண்ணீரில் வீசி எறிந்தேன்.
சிறிது நேரம் தண்ணீரில் தத்தளித்த குழந்தை நீரில் மூழ்கியது. அதன்பின்னர் அங்கிருந்து கிளம்பி பஸ்சில் பெரம்பலூருக்கு திரும்பினேன். பின்னர் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்படும் என்பதால் செய்வதறியாது திகைத்தேன். இதனால் குழந்தையை கடத்தியதாக நாடகமாட முடிவு செய்தேன். அதன்படி தன்மீது பேருந்தில் பயணித்த பெண் மயக்க மருந்து தெளித்து, குழந்தை மற்றும் உடமைகளை திருடி சென்றதாக புகார் அளித்தேன். தற்போது போலீசாரின் விசாரணையில் சிக்கிக் கொண்டேன் என கூறினார்.
கோவிந்தம்மாள் குழந்தையை கொன்று வீசியதாக கூறிய வாடிகண்டபுரம் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள கிணற்றில் பச்சிளம்குழந்தை பிரினித்தா பிணமாக தண்ணீரில் மிதந்தது. பின்னர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் குழந்தையை மீட்டனர்.
மேலும் கோவிந்தம்மாள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் குழந்தையை கொலை செய்தாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.