search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்தில் பலியான பெண் என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.26½ லட்சம் நஷ்டஈடு - மோட்டார் தீர்ப்பாயம் உத்தரவு
    X

    சாலை விபத்தில் பலியான பெண் என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.26½ லட்சம் நஷ்டஈடு - மோட்டார் தீர்ப்பாயம் உத்தரவு

    சாலை விபத்தில் பலியான பெண் என்ஜினீயர் குடும்பத்துக்கு ரூ.26½ லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என மோட்டார் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த சஞ்சீவி-பத்மா தம்பதிகளின் மகள் ஸ்ரீமதி. என்ஜினீயரிங் படித்திருந்த இவர் இருங்காட்டுகோட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி முத்து சுப்பிரமணியனுடன் மோட்டார் சைக்கிளில் ரெட்டேரியில் இருந்து மணலிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது தொடர்பாக மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் லாரி உரிமையாளர் மோகன், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருமான முத்து சுப்பிரமணி தந்தை ஜெய சங்கர் ஆகியோர் ஸ்ரீமதி குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது.

    வழக்கு விசாரணையின் போது பதிலளித்த ஐ.சி.ஐ. சி.ஐ. லாம்பார்ட், இன்சூரன்ஸ் நிறுவனம், மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதால் தான் விபத்து ஏற்பட்டது. லாரி சாலை ஓரமாக தான் நிறுத்தப்பட்டு இருந்தது என்று கூறி இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார் கூறும்போது, “முத்து சுப்பிரமணி மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி லாரி மீது மோதி இருக்கிறார். அவர் கவனமாக வாகனத்தை ஓட்டி இருந்தால் விபத்தை தவிர்த்து இருக்கலாம். அதே போல் லாரியை ஒழுங்காக சாலையில் நிறுத்தி இருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது மோட்டார் சைக்கிளை ஓட்டியவர், லாரி டிரைவர் இருவர் மீதும் தவறு உள்ளது.

    எனவே லாரி உரிமையாளர் மோகன், ஐ.சி.ஐ.சி.ஐ. இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடும், மோட்டார் சைக்கிள் உரிமையாளர் ஜெயசங்கர், மோட்டார் சைக்கிள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ள நே‌ஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.13 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு என ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு தொகையை ஸ்ரீமதி குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×