search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடிவேலு காமெடி போல மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற டிப்-டாப் நபர்
    X

    வடிவேலு காமெடி போல மோட்டார்சைக்கிளை திருடிச் சென்ற டிப்-டாப் நபர்

    நாகர்கோவில் அருகே சினிமாவில் வரும் வடிவேலு காமெடி போல வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை ஓட்டிப் பார்த்து வருவதாக சொல்லி திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. #MotorcycleTheft
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டாரைச் சேர்ந்தவர் சுனில்ராஜ் (வயது 30). இவர் செட்டிக்குளத்தில் பழைய மோட்டார்சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    நேற்று இவரது கடைக்கு டிப்-டாப் ஆடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். ஒரு மோட்டார்சைக்கிள் தனக்கு தேவைப்படுவதாக அவர் சுனில்ராஜிடம் தெரிவித்தார். அவரும் மோட்டார்சைக்கிளை தேர்வு செய்து கொள்ளுமாறு கூறினார்.

    உடனே அந்த நபர் 30 நிமிடத்துக்கும் மேலாக மோட்டார்சைக்கிள்களை சுற்றி, சுற்றி வந்து பார்த்தார். இறுதியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புல்லட் மோட்டார்சைக்கிளை தேர்வு செய்தார். இந்த மோட்டார்சைக்கிள் தனக்கு பிடித்து இருப்பதாகவும், அதனை ஓட்டி பார்க்க விரும்புவதாகவும் அந்த நபர் கூறினார்.

    உங்களுடன் எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் வருவார், அவருடன் சென்று மோட்டார்சைக்கிளை ஓட்டி பாருங்கள் என சுனில்ராஜ் சொன்னார். டிப்-டாப் நபர் மோட்டார்சைக்கிளை ஓட்ட, ஊழியர் பின்னால் அமர்ந்திருந்தார்.

    செட்டிக்குளத்தில் இருந்து புறப்பட்ட அவர் நேராக பொதுப்பணித்துறை சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு வந்தார். அங்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடச் சொன்னார். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர், நீங்கள் பெட்ரோல் எல்லாம் போடத் தேவையில்லை என கண்டித்தார். பெட்ரோல் போட்ட அடுத்த நிமிடத்தில் ஊழியரை டிப்-டாப் நபர் பலமாக தாக்கி கீழே தள்ளினார்.

    இதில் நிலை குலைந்த ஊழியர் சுதாரிப்பதற்குள் டிப்-டாப் நபர் மோட்டார்சைக்கிளுடன் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றார். கீழே விழுந்ததில் காயம் அடைந்த ஊழியர், சுனில்ராஜை சந்தித்து நடந்ததை கூறினார்.

    அதிர்ச்சி அடைந்த சுனில்ராஜ், தன்னை ஏமாற்றி டிப்-டாப் நபர் மோட்டார்சைக்கிளை திருடிச் சென்று விட்டதாக கூறி கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிள் திருடிய நபரை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் மோட்டார்சைக்கிள் ஒன்று அனாதையாக நின்றது. போலீஸ் விசாரணையில் அந்த மோட்டார்சைக்கிள் நாகர்கோவிலில் டிப்-டாப் நபர் திருடிச் சென்ற மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. போலீசுக்கு பயந்து அவர் மோட்டார்சைக்கிளை விவேகானந்தபுரத்தில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்று இருக்கலாம் என தெரிகிறது.

    செட்டிக்குளம் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் மோட்டார்சைக்கிள் திருடனின் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    சினிமாவில் வரும் வடிவேலு காமெடி போல் நாகர்கோவிலில் நடந்துள்ள மோட்டார்சைக்கிள் திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MotorcycleTheft
    Next Story
    ×