search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே கார்-லாரி மோதல்- 3 பேர் பலி
    X

    கரூர் அருகே கார்-லாரி மோதல்- 3 பேர் பலி

    கரூர் அருகே இன்று அதிகாலை கார்-லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.

    அரவக்குறிச்சி:

    பெங்களூர் கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்த சிலர் தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்ததும் நேற்றிரவு பெங்களூருக்கு காரில் புறப்பட்டனர்.

    காரை கர்நாடகா மாநிலம் கோலார் கோல்ட் பீல்ட் உருகம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 27) ஓட்டினார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ரெங்கமலை கணவாய் அருகில் செல்லும் போது திடீரென நிலைதடுமாறிய கார், சாலையின் சென்டர் மீடியனில் மோதி மறுபுறம் உள்ள சாலையில் பாய்ந்தது.

    அப்போது அந்த வழியாக கரூரில் இருந்து பரமக்குடிக்கு ஜல்லிக்கற்கள் ஏற்றிச்சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 7 பேரும் பலத்த காயமடைந்து, இடி பாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூர் கே.ஆர்.புரம் விஜினிபுரம் குல்சார் பில்டிங் டேங்க் ரோடு பகுதியை சேர்ந்த பிரட்டிசாமுவேல், ராக் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பெரணாம்பட்டுவை சேர்ந்த குமார் (50) ஆகியோர் உடல் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

    மேலும் பெங்களூர் கே. ஆர். புரத்தை சேர்ந்த மேரி அன் ஜாய்ஸ்(45), பெங்களூர் ராமமூர்த்தி நகர் நாராயணரெட்டி லேஅவுட் பகுதியை சேர்ந்த கிரேசி கீர்த்திகா (18), ரூத் (45), டிரைவர் தினேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பலியான 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    விபத்து ஏற்பட்டது எப்படி? என்று தெரியவில்லை. டிரைவர் தினேஷ் தூங்கிய தன் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பலியான குமார் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு திரும்பிய போது விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    Next Story
    ×