என் மலர்
செய்திகள்

நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் தேர்ச்சி: செங்கோட்டையன் பேட்டி
ஈரோடு:
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.41 கோடியே 6 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இதற்காக இன்று காலை 7 மணிக்கு நடந்த பூமி பூஜையில் தமிழக கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல் படி நடக்கும் இந்த அரசு அனைத்து கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக திகழ்ந்து வருகிறது.
அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திருத்தி அமைக்கப்பட்ட பாட புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறுவது தவறான கருத்தாகும். பள்ளிகள் திறந்து 3 நாட்களுக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இப்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 65 மாணவர்கள் தான் தேர்ச்சி பெற்றார்கள். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே நீட் தேர்வு பயிற்சி தொடங்கியதால் நீட் தேர்வில் 1412 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வுக்காக இந்தியாவிலேயே பயிற்சி அளிக்கும் ஒரே மாநிலம் நமது தமிழகம் தான். இன்னும் கட்-ஆப் மார்க் வரவில்லை. வந்த பிறகு தான் எத்தனை மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு செல்வார்கள் என தெரியவரும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.