search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேத பரிசோதனை செய்த உடலை சலவை தொழிலாளி தைத்த விவகாரம் - ஆஸ்பத்திரி ஊழியர்கள் சஸ்பெண்டு
    X

    பிரேத பரிசோதனை செய்த உடலை சலவை தொழிலாளி தைத்த விவகாரம் - ஆஸ்பத்திரி ஊழியர்கள் சஸ்பெண்டு

    திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்த உடலை சலவைத் தொழிலாளி தைத்த விவகாரம் தொடர்பாக பணியாளர்கள் 3 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட உடலை மருத்துவப் பணியாளர் அல்லாத ஒருவர் ஊசியால் தைப்பது போன்ற வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் மருத்துவப் பணியாளர் அல்லாத ஒருவர் இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இதையடுத்து கலெக்டர் ராசாமணி உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சம்‌ஷத் பேகம் தலைமையிலான குழுவினர் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது வீடியோ வில் இருந்த நபர் ஆஸ்பத் திரியில் ஒப்பந்த சலவைத் தொழிலாளியாக பணி புரியக்கூடிய வீரமணி (வயது 52) என்பதும், மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தவுடன் அந்த உடலின் பாகங்களை ஒன்று சேர்த்து தைக்ககூடிய பணியில் மருத்துவப் பணியாளர்களுக்கு பதிலாக இவர் அப்பணியை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து எத்தனை நாட்களாக இது போன்று நடைபெற்று வருகிறது. தவறு செய்த மருத்துவப் பணியாளர்கள் யார் யார் என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் தற்போது 3 மருத்துவப் பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் கூறும் போது, மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய சில மருத்துவப் பணியாளர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலையை சலவைத் தொழிலாளியைக் கொண்டு செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எனவே முதல்கட்டமாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விரிவான அறிக்கையை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றனர்.


    Next Story
    ×