search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  திருக்கோவிலூர் அருகே மாணவன் கொலை: தாய்-மகளை தாக்கி மர்ம மனிதர்கள் யார்?
  X

  திருக்கோவிலூர் அருகே மாணவன் கொலை: தாய்-மகளை தாக்கி மர்ம மனிதர்கள் யார்?

  திருக்கோவிலூர் அருகே தாய், சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம கும்பலை தடுக்க வந்த மாணவனை தாக்கி கொடூரமாக கொலை செய்த கும்பல் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
  திருக்கோவிலூர்:

  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி (வயது 46). இவரது இளைய மகள் தனம் (15), மகன் சமயன் (8). இவன் அங்குள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

  கடந்த 21-ந் தேதி இரவு ஆராயி தனது மகள், மகனுடன் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம மனிதர்கள் ஆராயி உள்பட 3 பேரையும் உருட்டுக்கட்டைகளால் தாக்கி விட்டு சென்றனர்.

  இதில் மாணவன் சமயன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பலியானான். ஆராயி, தனம் ஆகியோர் படுகாயத்துடன் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  இந்த சம்பவம் தொடர்பாக அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் அரசியல் கட்சியினர் திருக்கோவிலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக் குமார், வீமராஜ் ஆகியோர் மேற்பார்வையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டது. ஆராயியும், அவரது மகள் தனத்தையும் மர்ம வாலிபர்கள் தாக்கி பலாத்காரம் செய்ய முயன்றபோது அதை தடுக்க வந்த மாணவன் சமயனை கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் சென்று கொலையாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.

  இந்த சம்பவத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். அதன் பேரில் அந்த பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபர்கள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

  மேலும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் சுற்றி திரிந்தார்களா? என்றும் விசாரணை மேற்கொண்டனர். அதில் எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.


  இதற்கிடையில் தாக்குதலில் காயம் அடைந்த ஆராயி, தனம் ஆகியோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  ஆராயி உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்தால் அவரிடம் விசாரணை நடத்தி கொலையாளிகள் பற்றி துப்பு துலக்க வாய்ப்பு கிடைக்கும் என போலீசார் கருதினர். ஆனால் அவர் முழுமையாக குணம் அடையவில்லை. சிறுமி தனத்தின் உடல்நிலையும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. எனவே அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.

  மாணவன் கொலை செய்யப்பட்டு 8 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் திணறி வருகின்றனர். இந்த சம்பவத்தில் மர்மம் நீடித்து வருகிறது.

  சம்பவம் நடந்த அன்றே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தால் குற்றவாளிகளை உடனே பிடித்திருக்கலாம். போலீசார் மெத்தனமாக செயல்பட்டதால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

  இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அரசியல் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

  இதனால் திருக்கோவிலூர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #Tamilnews
  Next Story
  ×